Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Trichy

“காதல், பாசம் என்ற பெயரில் ஒரு பெண் வஞ்சிக்கப்படும் போது, அவள் இழந்ததை மீட்க சட்டம்-ஒழுங்கு கை கொடுக்க மறுத்தால், இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது மரணத்தின் விளிம்பைத்தான்” என்பதை உணர்த்தும் ஒரு நெஞ்சை உலுக்கும் போராட்டம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அடுத்த வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (40). இவரது கணவர் செல்வகுமார், முன்னாள் காவல்துறை அதிகாரி. பட்டாலியன் பிரிவில் பணியாற்றி, பின்னர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார். கணவனின் மறைவுக்குப் பின், தன் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ரேகா தனி மரமாய் நின்றுள்ளார்.

ரவுடியின் வலையில் வீழ்ந்த ரேகா
கணவனை இழந்து தவித்த ரேகாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டான், அதே பகுதியைச் சேர்ந்த ‘ரவுடி’ ராஜா. ஆதரவற்ற நிலையில் இருந்த ரேகாவுக்கு ஆறுதலாக இருப்பது போல் நடித்து, மெல்ல மெல்ல அவரிடம் நெருங்கியுள்ளான்.

இதையும் படியுங்க  பள்ளிக் காதல் மனைவி… கல்லூரித் தோழி..! இரண்டுக்கும் மத்தியில் சிக்கிய ராணுவ வீரர்..! ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த பயங்கர டவிஸ்ட்..!

பாசமான வார்த்தைகளை நம்பி, தன் கணவர் விட்டுச் சென்ற பணம் மற்றும் சேமிப்பிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னிடம் இருந்த சொகுசு கார் ஆகியவற்றை அந்த ரவுடியிடம் முழுமையாக நம்பி ஒப்படைத்துள்ளார் ரேகா. ஆனால், காலம் கடந்துதான் தெரிந்திருக்கிறது, தான் தஞ்சம் புகுந்தது ஒரு ரவுடியின் நயவஞ்சக வலையில் என்று.

Trichy

கலெக்டர் ஆபீஸில் தீக்குளிப்பு முயற்சி
நாட்கள் செல்லச் செல்ல ரவுடி ராஜாவின் சுயரூபம் வெளிப்பட, இருவருக்கும் இடையே கடும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. “எனது பணத்தையும், காரையும் உடனடியாகத் திருப்பிக் கொடுத்துவிடு” என்று ரேகா கெஞ்சியுள்ளார். ஆனால், ஒரு ரவுடிக்கே உரிய பாணியில் பணத்தைத் தர மறுத்து மிரட்டியுள்ளான் ராஜா.

தன்னை ஏமாற்றிய ரவுடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ரேகா, அங்கு தற்கொலை செய்து கொள்வதற்காகத் திடீரெனத் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து மீட்டனர்.

இதையும் படியுங்க  அரசு அலுவலகத்தை ஈஷா யோகா கிளையாக மாற்றிய சிவகங்கை மருத்துவ அதிகாரி..! அப்பட்டமான சட்ட மீறல்..!

100 அடி உயர டவரில் மரணப் போராட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் தடுத்தும், தன் அழுகுரல் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவில்லை என்கிற விரக்தியில், இன்று காலை திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தார் ரேகா. யாரும் எதிர்பாராத தருணத்தில், அங்கிருந்த 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

100 அடி உயரத்தில் நின்று கொண்டு, “எனக்கு நீதி வேண்டும்.. அந்த ரவுடியிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தாருங்கள்.. இல்லையென்றால் குதித்து விடுவேன்” என்று அவர் கதறிய கதறல், மருத்துவமனை வளாகத்தையே அதிர வைத்தது.

பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை
தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பதறியடித்து ஓடிவந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ரேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “உங்களுக்கு அநீதி இழைத்த ரவுடி ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், உங்கள் பணம் மீட்டுத் தரப்படும்” என ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவல்துறையினர் உறுதியளித்தனர்.

இதையும் படியுங்க  "இபி ஆபீஸ்ல இருந்து வர்றோம்.." மீட்டர் பாக்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்ட ₹50-ஆ? திண்டுக்கல்லில் சிக்கிய பலே லேடி.. மக்களே உஷார்!

அதன் பின்னரே சமாதானமடைந்த ரேகாவை, தீயணைப்புத் துறையினர் தங்களது மீட்பு வாகன ஏணியின் மூலம் 100 அடி உயரத்திலிருந்து பத்திரமாகக் கீழே இறக்கினர். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், உடனடியாக அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஒரு பெண்ணை ஏமாற்றி, அவளது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டு சுதந்திரமாகச் சுற்றும் ரவுடி ராஜாவுக்கு எதிராகத் திருச்சி மாநகரக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரோகத்தால் வீதிக்கு வந்த ஒரு பெண், நீதிக்காக 100 அடி உயரத்தில் ஏறி நின்று நடத்திய மரணப் போராட்டம் திருச்சியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

-ஜான் கண்ணா- திருச்சி மாவட்ட செய்தியாளர்

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஹிஸ்டரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago