“அரசு உயர்பதவியில் அமர்ந்து கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அப்பட்டமாகக் கேலிப் பொருளாக்கும் ‘ஆன்மீக’ அராஜகம் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குள் அரங்கேறி வரும் அத்துமீறல்கள், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையே அதிர வைத்துள்ளது.
“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அரசு அலுவலகங்களிலோ, அரசு நிதியிலோ எந்தவொரு குறிப்பிட்ட மதப் பிரசாரங்களோ, ஆன்மீகச் சேவைகளோ, வழிபாடுகளோ செய்யச் சட்டப்பூர்வமாக அனுமதியில்லை” என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 27 மற்றும் 28. ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973’-ன் படி, அரசு ஊழியர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பணியின் போது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் ஆதரவாகச் செயல்படக் கூடாது என்பதும், அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத அடையாளங்களோ, படங்களோ வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமே பலமுறை சாட்டையடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட மருத்துவ அலுவகத்தில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி
ஆனால், இந்தச் சட்டதிட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல், ஒட்டுமொத்த அரசு அலுவலகத்தையே தனிநபர் ஆன்மீகப் பிரசாரக் கூடாரமாக மாற்றி அராஜகம் செய்து வருகிறார் சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் மீனாட்சி.
அலுவலகப் பணி நேரத்தில் மக்கள் கோப்புகளை முடக்கிவிட்டு, ஈஷா யோகா மைய ஆட்களை வரவழைத்து பவர் பாயிண்ட் பிரசன்டேசன் போடுவது; ஊழியர்களை மிரட்டி, வரிசையில் நிற்க வைத்து ஜக்கி வாசுதேவின் ருத்ராட்சத்தைக் கட்டாயமாகத் திணிப்பது; தனது தனி அறையிலேயே சத்குருவின் புகைப்படத்தை வைத்துப் பூஜை நடத்துவது என விதிகளுக்குப் புறம்பான அத்தனை கூத்துகளும் இங்கே அரங்கேறி வருகின்றன என குற்றம்சாட்டுகின்றனர் மருத்துவதுறை ஊழியர்கள்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஈஷா யோகா மையத்தில் இருந்து ஆட்களை வரவைத்து சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும், அவரது ஈஷா யோகா மையத்தை பற்றியும் பவர் பாயிண்ட் பிரசன்டேசன் போட்டு மருத்துவ உயரதிகாரி மீனாட்சி ஏற்பாட்டின் பேரில் வகுப்பு எடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது.
மருத்துதுறையில் பணியாற்றும் அனைவருக்கும் ருத்ராட்சம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விருப்பம் இல்லாமல் மாவட்ட அதிகாரியின் கட்டாயத்தால் அலுவலக பணியாளர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவரும் ருத்ராட்சம் பெற்று செல்கிறார்கள். நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் போட்டோவை வைத்து, அவருக்கு பூஜை செய்து அனைவரும் அவரை வணங்கிட அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர் மீனாட்சி.

ருத்ராட்சம் கட்டாயம்… வாட்ஸ்அப் ரிவியூ டார்கெட்!
அதன் பிறகு அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் ஈஷா யோகா ஆப் ஒன்றை அனைவரும் பதிவிறக்கம் செய்து தினமும் அதற்கு ரிவியூ போட வேண்டும் என்றும், அதில் கூறும் அறிவுரைகள் அனைத்தையும் தினமும் ஒரு மணி நேரம் கேட்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதை கேட்காத, விருப்பம் இல்லாத பணியாளர்களை சம்மந்தம் இல்லாமல் திட்டுவதும், மருத்துவ பணி ரிப்போர்ட் பேப்பர்களை தூக்கி அவர்கள் முகத்தில் எறிந்தும் மனதளவில் துன்புறுத்தி வருகிறார்.
இவரிடம் ஈஷா யோகா பற்றியும், சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும் பெருமையாக பேசும் பணியாளர்கள் வேலை செய்யவில்லை என்றாலும் கடிந்து கொள்ள மாட்டார். இதற்கு மீனாட்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி எந்த வகையிலான புகார்கள் சென்றாலும் அதனை மீனாட்சி உதாசீனப்படுத்தி விடுவார். இதனால் வேலை செய்யும் பணியாளர்கள் மிகவும் மன அழுத்தத்தை அனுபவித்து வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்ட மருத்துவ அலுவகத்தில் சத்குருவின் புகைப்படம்
மருத்துவர் மீனாட்சி தினமும் அலுவலக நேரத்தில் காலை, மாலை என ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்வதாக அமர்ந்து கொள்வார். அலுவலக கோப்புகளில் கையொப்பம் வாங்க பணியாளர்கள் அனைவரையும் பல மணி நேரங்கள் காத்திருக்க வைப்பார். மாவட்ட சுகாதார அலுவலர் தனி அறையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் போட்டோவை வைத்து பூஜை செய்து தினமும் வழிபாடு செய்து வருகிறார். அதற்கு உதவி செய்யும் பணியாளர்களை மிகவும் நெருக்கமாக வைத்துக் கொள்கிறார். ஈஷா யோகா மையத்திற்கு நன்கொடை என அரசு ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி நிதி வசூலிக்கிறார்.

சிவகங்கை மாவட்ட மருத்துவ அதிகாரிகளின் வாட்ஸ்-அப் ரிவியூ
ஈஷா யோகா மையத்தில் இருந்து வரும் நபர்களும், மருத்துவர் மீனாட்சியும் சேர்ந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றி திரையில் படம் போட்டு வகுப்பு எடுக்கும்போது, யாரும் போட்டோ எடுத்து விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் ஊழியர்கள் அனைவரது மொபைல்களையும் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் இருவரும் வெளியேறிய பின்பே அனைவரிடமும் மொபைல் திரும்ப வழங்கப்படும்” என சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவ ஊழியர்கள் புலம்பி தவிக்கின்றனர். (அப்போது கிடைத்த நேரத்தில் ஊழியர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.
சட்டம் சொல்வதென்ன..?
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளின்படி, அரசு அலுவலகங்களில் அரசு நிதியிலோ அல்லது அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வப் பணியின் போதோ மதப் பிரசாரங்களோ, ஆன்மீக சேவைகளோ, குறிப்பிட்ட மதச் சடங்குகளோ செய்ய சட்டப்பூர்வமாக அனுமதியில்லை. பிரிவு 27 (Article 27) -படி எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் வளர்ப்பதற்காகவோ அல்லது பராமரிப்பதற்காகவோ மக்கள் வரிப்பணத்தைப் (அரசு நிதியை) பயன்படுத்தக் கூடாது.
பிரிவு 28 (Article 28)-படி முழுமையாக அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு அலுவலகங்களில் எந்தவிதமான மத போதனைகளும், மத வழிபாடுகளும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973, மற்றும் மத்திய அரசு ஊழியர் விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பணியின் போது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்படக் கூடாது.

சிவகங்கை மருத்துவ அதிகாரிகளின் வாட்ஸ்-அப்ன் குரூப்
அரசு அலுவலக வளாகத்தை மதப் பிரசாரங்களுக்கோ, ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கோ அல்லது பிற ஆன்மீகச் சேவைகளுக்கோ பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானதாகும். அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற வழிபாடுகள் நடத்துவது மற்றும் மத அடையாளங்களை வைப்பது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளன.
இதையும் படியுங்கள்:-
அப்பட்டமான சட்ட மீறல்
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்கள் சிலர், ”அரசு அலுவலகங்கள் என்பது பொதுமக்களுக்கானவை. அங்கு மதச்சார்பற்ற தன்மை பேணப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத வழிபாட்டு அடையாளங்களோ, சிலைகளோ, படங்களோ வைக்கப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான இடம் என்பதால், அங்கு அதிகாரப்பூர்வமாக ஆன்மீகச் சேவைகளிலோ அல்லது மதப் பிரசாரங்களிலோ ஈடுபடச் சட்டம் அனுமதிக்காது.
ஆனால், அவற்றையெல்லாம் அப்பட்டமாக மீறியுள்ளார் சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரான மீனாட்சி. மக்களுக்கான நல்வாழ்வுச் சேவைகளை வழங்க வேண்டிய ஒரு மாவட்டத்தின் தலைமை மருத்துவ அலுவலகமே, ஒட்டுமொத்த அரசு விதிகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இப்படி ஒரு தனிநபர் பிரசாரக் கூடாரமாக மாறியிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். சாதாரண மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், கோப்புகளின் ஒப்புதலுக்காகவும் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் வேளையில், மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு உயர் அதிகாரி, அலுவலக நேரத்தில் தியானம் என்ற பெயரில் கடமையில் இருந்து தவறுவது எந்த வகையில் நியாயம்?

சிவகங்கை மாவட்ட மருத்துவ அதிகாரி மீனாட்சி
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய மதச்சார்பற்ற கொள்கையையும், சட்டம் வகுத்துள்ள கடுமையான உத்தரவுகளையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில், சக ஊழியர்களைத் துன்புறுத்தி, கட்டாய நிதியும், ருத்ராட்சத்தையும் திணிக்கும் அதிகாரி மீனாட்சியின் தன்னிச்சையான போக்கு உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் தியானம் செய்வதும், ஆன்மீகப் பாதையைப் பின்பற்றுவதும் ஒருவரின் தனிமனித உரிமை. ஆனால், அதைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு அலுவலகத்திற்குள் திணிப்பது அப்பட்டமான சட்ட மீறல்.
அடுக்கடுக்கான புகார்களும், ஊழியர்களின் மன உளைச்சல் குறித்த புலம்பல்களும் ஆதாரங்களுடன் வெளியே வந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழகச் சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளைப் பந்தாடிய தலைமை மருத்துவ அதிகாரி மீனாட்சி மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அரசு ஊழியர்கள் மீது திணிக்கும் இத்தகைய அதிகாரிகளுக்குச் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

[…] […]