மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவரும், Bigg Boss Tamil நிகழ்ச்சியின் போட்டியாளருமான ‘வாட்டர் மெலான் ஸ்டார்’ திவாகர், யூடியூப் சேனல் மற்றும் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் வழங்கச் சென்றபோது, தன்னை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக திவாகர் தெரிவித்துள்ளார். இதனால் நேர்காணலை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல், மற்றொரு யூடியூப் சேனலின் நேர்காணலின்போதும், தான் பேசிய காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கூறி அங்கிருந்த கேமராவை எடுத்ததாகவும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேமரா சேதமடைந்ததாகக் கூறி தனது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் ஜி-3 காவல் நிலைய போலீசார் தன் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும், ஆனால் தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகர், “நான் மதுரையிலிருந்து வந்து குறுகிய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு என் வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் என்னை திட்டமிட்டு குறிவைத்து தாக்குகிறார்கள்,” என்றார்.
மேலும், “அந்த யூடியூப் சேனலுக்கு ஆதரவாக சிலர் செயல்படுகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கம் ஜி-3 காவல் நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர், என் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், என் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்னை மிரட்டியதற்கும், ஒரு அறையில் அடைத்து வைத்ததற்கும் சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்ட திவாகர், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தும் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் தைரியமாக எதிர்த்து போராடியதால்தான் இன்று உயிருடன் இருக்கிறேன். பலர் இதுபோன்ற அவமானங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்,” என்றார்.
மேலும், “சமூக வலைத்தளங்களில் அவமானப்படுத்தும் வகையில் சில யூடியூப் சேனல்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கே ஆதரவாக செயல்படுகின்றனர்.
சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் அது மிகவும் வேதனையானது. நீதி, நேர்மை செத்துப் போய், அராஜகம் தலைவிரித்தாடுகிறது,” என்று ஆவேசமாகக் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும், தனது கோரிக்கைகளை முன்வைக்கவும் விரைவில் நேரம் கேட்க இருப்பதாகவும் திவாகர் தெரிவித்தார்.
தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாகவும், அதுதொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் தனது வசம் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், சம்பவம் தொடர்பான முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திவாகர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
