தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
பரஸ்பர மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள், தொழில்நுட்ப ரீதியிலான கூட்டணிகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த புதிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வளர்ந்து வரும் பன்முக உறவுகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற பிறகு, அவரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இன்று முதலமைச்சரின் பிறந்தநாளாக இருப்பதால், இச்சந்திப்பின் போது அமெரிக்க தூதர் தனது பிரத்யேக பிறந்தநாள் வாழ்த்துகளையும் அவரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 10 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தின் (Yale University) அழைப்பை ஏற்று, அங்கு அவர் சிறப்புரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமெரிக்கப் பயணத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் தெரிகிறது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில், அமெரிக்க தரப்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதருமான செர்ஜியோ கோர், சென்னை அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல். நெய்ஷூலர் மற்றும் புதுடெல்லி அமெரிக்க தூதரகத்தின் தலைமை அலுவலர் லிசா ஒய். பிரவுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், ஐஏஎஸ் மற்றும் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், ஐஏஎஸ் ஆகியோர் முதலமைச்சருடன் இணைந்து இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு, இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவடைந்து வரும் உறவுகளிலும், தமிழ்நாட்டின் சர்வதேச பொருளாதார மற்றும் இராஜதந்திர பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
