மத்திய அரசு தரப்பிலிருந்து கிடைத்துள்ள அண்மைத் தகவல்களின்படி, இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் 22-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ள இரண்டு மிக முக்கியமான விஷயங்கள், மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா. மகளிர் இடஒதுக்கீட்டை முழுமையாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அதற்குத் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படுவது அத்தியாவசியமான ஒன்று.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், ஒரு சில நாட்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை முதலில் நிறைவேற்றிவிட்டு, அதனைத் தொடர்ந்து ஜூலை 22-ல் தொடங்கும் வழக்கமான மழைக்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முழுமையாக விவாதித்து அமல்படுத்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் வியூகம் வகுத்துள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்ற சூழலில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு போன்ற முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்களை நிறைவேற்றப் போதிய பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் வலுவாக இருக்கும் திமுக, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளை பாஜாக தலைமை தற்பொழுது அணுகியுள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று மசோதாக்களை சுமுகமாக நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான விரிவான அறிவிப்புகள் மத்திய அரசிடமிருந்து மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கும் தொகுதி மறுவரையறைக்கு திமுக போன்ற கட்சிகள் என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.
