https://republictn.com/

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருவது பெரும் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள், அணுகுமுறைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. உழைத்த மூத்த நிர்வாகிகளான வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் போன்றோரை அழைத்து பேசி, அவர்களின் அதிருப்திகளை சரி செய்ய இபிஎஸ் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இபிஎஸ்-ஐத் தவிர்த்து வேலுமணி தரப்பினர் தனியாக வந்து ஆலோசனை நடத்தியது கட்சிக்குள் இன்னும் பிளவுகள் தீரவில்லை என்பதைக் காட்டுகிறது.

சசிகலா மீதான வெறுப்பால் எடப்பாடி பழனிசாமியை அரியணையில் ஏற்றிய கட்சிக்காரர்களை, அவரே தற்போது தற்காப்பு வாதங்களால் வெளியேற்றி வருகிறார்.

கட்சியின் முக்கியப் புள்ளிகள் விலகும்போது, “அவர்கள் பதவிக்காகச் செல்கிறார்கள்” என அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும், இபிஎஸ் தனது மகன் மிதுனை அரசியலுக்குக் கொண்டு வர மாட்டார் என்று அளித்த உறுதிமொழி குறித்தும் கேள்விகள் எழுகின்றன. கடந்த 5 வருடங்களாக ஐடி விங், தேர்தல் பணிகளில் மிதுன் தீவிரமாகச் செயல்படுகிறார். திமுகவில் மு.க. ஸ்டாலின் ஆரம்பத்தில் கூறியதைப்போலவே இங்கும் வாரிசு அரசியல் பின்னணியில் நகர்கிறது.

அதிமுக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இல்லாததால், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தவெக-வை நோக்கி நகர்கின்றனர். “தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவு” என்று விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் விரைவில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயபாஸ்கர் விலகுவதை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார், “அதிமுக மூலம் சேர்த்த சொத்துக்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அமைச்சர்களாக இருந்தவர்கள் சொத்துப் பட்டியலை வெளியிட்டால் எல்லோர் பக்கமும் உள்ள உண்மைகள் வெளியே வரும்.

பாஜகவால் செய்ய முடியாத அதிமுகவின் வாக்கு வங்கி சரிவை, தற்போதைய அரசியல் சூழலில் விஜய் தலைமையிலான தவெக சாத்தியப்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தனது பிடிவாதத்தை விடுத்து மூத்த நிர்வாகிகளை அரவணைக்கத் தவறினால், அதிமுகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago