https://republictn.com/

தவெக அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் மிகப் பெரிய அதிரடி மாற்றம் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி காங்கிரஸ் மேலிடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் உள்கட்சிப் பூசல்களும், செல்வப்பெருந்தகை திமுகவில் இணையப் போகிறார் என்ற தகவல்களும் கோட்டை வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.

டெல்லி மேலிடத்தின் அதிரடி முடிவு
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற தலைவர்கள், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்ததும், காங்கிரஸ் உடனடியாகத் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுப் பெற்றது. இந்த திடீர் கூட்டணி மாற்றத்தால், ஆரம்பம் முதலே திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த செல்வப்பெருந்தகை, கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு ராஜினாமா சந்திப்பு
சமீபத்தில் நடைபெற்ற செல்வப்பெருந்தகையின் மகள் திருமணத்திற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் டெல்லி தலைவர்கள் யாரும் வரவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். இதுவே காங்கிரஸ் கட்சிக்குள் செல்வப்பெருந்தகையின் நிலை என்ன என்பதை வெட்டவெளிச்சமாக்கியது.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த செல்வப்பெருந்தகை, தன்னை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் அளித்துள்ளார்.

திமுகவிற்கு எதிரான ‘டிராக்’
செல்வப்பெருந்தகை வெளியேறும் பட்சத்தில், தமிழக காங்கிரஸ் புதிய தலைவராகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருபவர் எம்.பி மாணிக்கம் தாகூர். கடந்த காலங்களில் “திமுக செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் தான் பொதுவெளியில் பதில் சொல்ல வேண்டியுள்ளது” என்று மிகக் காரசாரமாகப் பேசி திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் விழக் காரணமானவர் மாணிக்கம் தாகூர்.

இவர் தலைவராவதன் மூலம், தமிழகத்தில் திமுகவுடனான உறவை முற்றிலும் துண்டித்துவிட்டு, புதிய ஆளுங்கட்சியான தவெக-வுடன் தங்களின் பிணைப்பை 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரை இன்னும் வலுவாக்க டெல்லி காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்கு பிறகும் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தியது, அவர் விரைவில் அறிவாலயம் நோக்கிப் பாயப் போகிறார் என்பதற்கான அச்சாரம் என்கிறார்கள்.

திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை?
முதன்முதலில் ‘புதிய தமிழகம்’ கட்சியில் தொடங்கி, புரட்சி பாரதம், விசிக, பகுஜன் சமாஜ் எனப் பல கட்சிகளைக் கடந்து காங்கிரஸில் இணைந்த செல்வப்பெருந்தகை, மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் மிக முக்கியமான நபர். தற்போது காங்கிரஸ் கட்சியில் நிலவும் கசப்பான அனுபவங்கள், புதிய தலைமையாக மாணிக்கம் தாகூர் வரவிருக்கும் சூழல் ஆகியவற்றால், செல்வப்பெருந்தகை தனது ஆதரவாளர்களுடன் மிக விரைவில் திமுகவில் இணையப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது நடந்தால், வட மாவட்டங்களில் தலித், பட்டியலின மக்களின் வாக்கு வங்கியைத் தன்வசம் தக்கவைக்க நினைக்கும் திமுகவிற்கு இது ஒரு பெரிய ஜாக்பாட்டாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago