Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Samantha’

பிரபல நடிகை சமந்தா, தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் (Myositis) எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு, அதனால் தான் எதிர்கொண்ட மனரீதியான போராட்டங்கள் மற்றும் அதன்பிறகு தனது வாழ்க்கையில் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.

மயோசிடிஸ் நோயின் தீவிர பாதிப்பில் இருந்தபோது, தனது சொந்த அடையாளத்தையே இழந்துவிட்டதைப் போல உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் விரக்தியான மற்றும் மோசமான எண்ணங்கள் மட்டுமே தனது மனதில் தோன்றியதாகவும், “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?” என்ற கேள்வியும் ஏக்கமும் பலமுறை தனக்குள் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்த நோய் என் வாழ்வில் வராமல் இருந்திருக்கலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ள சமந்தா, ஆரம்பத்தில் இந்த நோய் பாதிப்பால் மிகவும் விரக்தியடைந்ததாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் அதனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நோய் தனக்கு மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற விலைமதிப்பற்ற குணங்களை கற்றுக்கொடுத்ததாகவும், அதன் மூலம் தனது வாழ்க்கையை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "என் அப்பாவா இது?" 'ஹபீபி' படத்தை பார்த்து மிரண்டு போன தனுஷ்!
Samantha

மயோசிடிஸ் பாதிப்பிற்குப் பிறகு தனது வாழ்க்கை முறையையும், நடிக்கும் திரைப்படங்களின் தேர்வையும் மிகவும் கவனமாக மாற்றியமைத்துக் கொண்டதாக சமந்தா கூறியுள்ளார். நோயின் தீவிர பாதிப்பின்போது, நடிப்பை முழுமையாகக் கைவிட்டுவிடலாம் என்றும் அவர் முடிவு செய்திருந்தார். கேமராவுக்கு முன்னால் நடிப்பதைத் தவிர்த்து, திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்முனைவில் (Entrepreneurship) மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘சிட்டாடல்’ (Citadel) படக்குழுவினருக்கு மின்னஞ்சல் மூலமாக தனது முடிவைத் தெரிவித்திருந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். ஆனால், அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு (Raj Nidimoru), அவரை கைவிட மறுத்து தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது தூண்டுதலின் பேரிலேயே சமந்தா மீண்டும் கேமரா முன் திரும்பியதாகவும், அதன் தொடர்ச்சியாக அண்மையில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram) திரைப்படத்தில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடி வசூல் சாதனை படைத்த தனது சொந்த தயாரிப்பான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் ‘Thassadiya’ என்ற அதிரடியான பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தபோதுதான் தான் கர்ப்பமாக இருப்பது சமந்தாவுக்குத் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பாடலுக்கான நடனக் காட்சியை ஆடி முடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  பெங்களூரு இன்ஸ்டா பிரபலம் வெளியிட்ட ஆடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

தற்போது சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கர்ப்பம் தங்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியம் என்று தெரிவித்துள்ள அவர், தாய்மை எனும் புதிய வாழ்க்கைக் கட்டத்தை வரவேற்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதற்காக திரைப்படங்களில் இருந்து தற்காலிகமாக மகப்பேறு விடுப்பு (Maternity Break) எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Samantha

மயோசிடிஸ் பாதிப்பிற்குப் பிறகு, ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளை விளம்பரம் செய்யக் கூடாது என்ற உறுதியான முடிவை சமந்தா எடுத்துள்ளார். இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 15-க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்தங்களை அவர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது எந்தவொரு பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பும், அந்தப் பொருளின் தரம் மற்றும் உடல்நலத்துக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து மூன்று தனித்தனி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே முடிவு செய்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். உடல்நலப் பாதிப்புக்குப் பிறகு தனது உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "தியேட்டரை விட்டு பயமில்லாம வர முடியாது! 'டிமான்டி காலனி 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு..

மயோசிடிஸ் பாதிப்புக்கு முன்பு, தனக்கு ஓய்வே தேவையில்லை என்றும், தொடர்ந்து 5 முதல் 6 திரைப்படங்கள் வரை ஓய்வின்றி நடித்துக் கொண்டே இருக்க முடியும் என்றும் தான் நினைத்ததாக சமந்தா கூறியுள்ளார். “நடிகர்களுக்குத் தங்களுக்கு முடிவே இல்லை என்ற ஒருவித அகந்தை (Ego) வந்துவிடுகிறது” என்று தெரிவித்துள்ள அவர், இந்த நோய் பாதிப்பு தனது வாழ்க்கைக்கும் உடல்நலத்திற்கும் எல்லைகள் இருப்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலில் பெண்களின் வாழ்க்கை மற்றும் சுய முடிவுகள் குறித்தும் சமந்தா வலுவான கருத்தை முன்வைத்துள்ளார். பெண்கள் எப்போதுமே ஒரு வேலைக்காகவோ அல்லது வாழ்க்கையில் ஒரு வாய்ப்புக்காகவோ தங்களை யாராவது தேர்ந்தெடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றும், மாறாக தங்களது வாழ்க்கை குறித்த முக்கியமான முடிவுகளைத் தாங்களே எடுக்கப் பழக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மயோசிடிஸ் போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்பை எதிர்கொண்டபோதிலும், அதிலிருந்து மன உறுதி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலைப் பெற்றுக் கொண்டு, தனது வாழ்க்கை முறை, தொழில் தேர்வுகள் மற்றும் எதிர்காலம் குறித்து புதிய அணுகுமுறையுடன் சமந்தா முன்னேறி வருகிறார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago