Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

“வடசென்னை மக்கள் ரொம்ப ரொம்ப ஸ்வீட்” என்று நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சருமான ரம்யா ரங்கநாதன் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரம்யா ரங்கநாதன், சென்னை பெரம்பூர் பகுதி குறித்த தனது அனுபவங்களையும், தனது திரைப்பயணத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “நான் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இதுவரை பெரம்பூர் பகுதிக்குச் சென்றதில்லை. இந்தப் படத்தின் மூலம் அந்தப் பகுதியை நேரில் பார்க்கவும், அதை ஆராயவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

பெரம்பூரின் இயற்கைச் சூழலும், அங்குள்ள இடங்களும் மிகவும் அழகாக இருந்தன. இவ்வளவு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தும் இந்த இடத்தைப் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்று உண்மையிலேயே வருத்தப்பட்டேன்” என்றார்.

மேலும், “ஐ.சி.எஃப். காலனி உள்ளிட்ட பல பகுதிகள் மிகவும் அழகாக உள்ளன. எதிர்காலத்தில் அவை சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

வடசென்னை மக்களைப் பற்றி பேசிய அவர், “அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். ‘ரொம்ப ரொம்ப ஸ்வீட்’. ஒரு புரமோஷன் பாடல் படப்பிடிப்பிற்காக அங்கு சென்றபோது, ‘வீட்டிற்கு வாருங்கள், காபி குடியுங்கள், சாப்பிட்டுச் செல்லுங்கள்’ என்று அன்புடன் அழைத்து உபசரித்தனர். என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படியுங்க  "அப்படியே இளம் சூர்யாவின் குரல்! மேடையில் மாஸாகப் பேசி இணையத்தைக் கலக்கும் தேவ் சூர்யா!"

மேலும், “அங்கு வசிக்கும் ஆங்கிலோ-இந்தியர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மிகவும் அன்பானவர்கள். முற்போக்கான சிந்தனையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்களாக இருந்தனர்” என்றும் பாராட்டினார்.

ரம்யா வெறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரும் நடிகையும் மட்டுமல்ல; அண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க் ஹோல்டரும், பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவியுமாவார். எஸ்.வி.சி.இ. பொறியியல் கல்லூரியில் பி.டெக் தகவல் தொழில்நுட்பம் படித்த அவர், ஐ.டி. தணிக்கைத் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர், நடனம் மற்றும் நடிப்பு மீது கொண்டிருந்த தீவிர ஆர்வம் காரணமாக தனது வேலையை விட்டு விலகி, திரைத்துறையில் பயணத்தைத் தொடங்கினார்.

இயக்குநர் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா, தனது திறமையை அடையாளம் கண்டு வாய்ப்பளித்த தனுஷுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தற்போது, இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில், பிரபல யூடியூப் ஜோடியான ‘பரிதாபங்கள்’ கோபியுடன் இணைந்து நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது கோபியின் நகைச்சுவையைப் பார்த்து சிரிக்காமல், சீரியஸாக நடிப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.

இதையும் படியுங்க  "25 வருடப் பகை ஓவர்! தனுஷுக்காக இறங்கிவந்த கரீனா கபூர்.. பன்சாலி கூட்டணியில் இணையும் பிரம்மாண்ட பான்-இந்தியா மூவி!"

தொடர்ந்து, ‘அன்பே டயானா’ திரைப்படம் குறித்து பேசிய ரம்யா, “வடசென்னையின் வாழ்க்கை முறையையும், அங்குள்ள மக்களின் இயல்பையும் அழகாகப் பதிவு செய்துள்ள படம் இது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும். இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். வருகிற ஜூலை 17-ஆம் தேதி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று படத்தைப் பாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

நடிகை ரம்யா ரங்கநாதனின் இந்தப் பேச்சும், வடசென்னை மக்களைப் பாராட்டிய அவரது கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago