‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு மற்றும் இதய செயலிழப்பு காரணமாக, ஜூலை 11, 2026 அன்று கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் எஸ். ஜானகி. சிறந்த பின்னணிப் பாடகிக்கான நான்கு தேசிய விருதுகள், தென்னிந்திய மாநில அரசுகள் வழங்கிய 33-க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் மைசூர் பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது மகன் முரளி கிருஷ்ணா உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான எஸ். ஜானகியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவரது உடல், மைசூருவின் பொகாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இன்று காலை 8 மணி முதல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 7.30 மணி முதலே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக கர்நாடக அரசு விரிவான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இன்று மாலை மைசூருவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனியனஹூந்தி பகுதியில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில், முழு அரசு மரியாதையுடன் எஸ். ஜானகியின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ். ஜானகியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், “பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற மகத்தான கலைஞர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “வானொலி முதல் ஸ்பாட்டிஃபை வரை அவரது அமுதக் கானங்கள் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இசையை வாழ்வாகக் கொண்டு பல தலைமுறைகளின் மனதை கவர்ந்த எஸ். ஜானகியின் மறைவு, இந்திய திரையிசை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
