தூய்மையான நிர்வாகம் என்று முழங்கிய தவெக அரசின் சாயம், பதவிகள் ஒதுக்கப்படும் போதே வெளுக்கத் தொடங்கியுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட போர்ஜரி புகார்கள், வறுமையில் வாடிய பெண்ணின் ஆட்டைத் திருடிய வழக்கில் சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய ஒரு வழக்கறிஞருக்கு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சிவில் வழக்கறிஞர் பதவி தாராளமாக வாரி வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த நீதித்துறையையும் அதிர வைத்துள்ளது. மாவட்ட செயலாளர்களின் சிபாரிசும், லட்சக்கணக்கில் கைமாறிய லஞ்சப் புகார்களும் இந்த நியமனத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து “republic தமிழ்நாடு”- ஊடகத்திற்கு கிடைத்த பிரத்தியேக தரவுகள் அதிர வைத்துள்ளது.

வாணியம்பாடி, புதூர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலா. கணவனை இழந்த நிலையில் குடும்ப வறுமையை போக்க ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திய நிலையில், கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, வாணியம்பாடி அம்பலால் தெருவைச் சேர்ந்த “ஷேக் சுல்தான்” மற்றும், அவரது கூட்டாளி திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் ‘ஷேக் சுல்தான் ஒரு “வழக்கறிஞர்’ இவர் மீது வாணியம்பாடி ஆம்பூர் காவல் நிலையங்களில் 100 -க்கும் மேற்பட்ட போர்ஜரி புகார்கள் சென்றுள்ளது. அதில் ஒரு வழக்குதான் ஆடு திருடியதில் ஆதாரத்தோடு மாட்டிக்கொண்டார்.

இந்த வழக்கு ஜூலை 27-ந்ததேதி விசாரணைக்கு வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிவில் வழக்குகள் தொடர்பான அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, “அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதாக” அறிவிப்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நியமனம் குறித்து பலரும் கண்டித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சிறுபான்மையினர் மாநில தலைவர் ஜெ.அஸ்லாம் பாஷா தனது முகநூல் பக்கத்தில், ”இவர் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே.. குற்றவாளி அல்ல என்ற நோக்கத்தோடு நியமிக்கப்பட்டவர். வாழ்க நீதித்துறை !!! என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்கறிஞர் இராம அசோகன் கூறுகையில், ”ஏற்கனவே அரசு வழக்கறிஞர்களை தவெக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் தலைக்கு 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞராக நியமித்துவிட்டதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கலாகி உள்ளது . கிட்டதட்ட 150 இடங்களில் காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு இதுபோன்ற பதவியை பகிர்ந்து கொடுத்துள்ளது தவெக அரசு. அதில் ஒருவர்தான் இந்த ஷேக் சுல்தான். இவருடைய ரத்த உறவு ஒருவர் தவெகவில் மேற்கு மாவட்ட பொருளாளராக இருக்கிறார். அவருடைய மனைவி ஒரு வழக்கறிஞரும்கூட. இவர்களின் சிபாரிசில்தான் ஆடு திருடிய வழக்கில் கைதான சுல்தானுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்துள்ளது.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அல்லது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் (APO / APP exams) மூலம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படவர் மீது குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவராக இருக்க கூடாது. மேலும் 7 ஆண்டு வரை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவம் இருக்க வேண்டும். இதுதான் அரசு வழக்கறிஞருக்கான தகுதி. ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்த தகுதி மீறப்பட்டு உள்ளது” என்றார்.
இந்த சர்ச்சை குறித்து வனத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது, ”இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அப்படி கண்டிப்பாக நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
”தவெக அரசின் முதலாவது மெகா ஊழல் – அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல். புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்” என பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார் அரசியல் விமர்சகரும், யூடியூபருமான மாரிதாஸ்.

ஆதாரங்களை நிரூபித்தால் நடவடிக்கை” என்று அமைச்சர் ரஞ்சித்குமார் மழுப்பினாலும், சிசிடிவி காட்சிகளும் நீதிமன்றம் ஆவணங்களும், கைதாகி சிறை தண்டனை பெற்றவர் என்பதற்கான ஆதாரம் ஊர் அறிந்த உண்மையாகவே இருக்கின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் பதவியில் ஆடு திருட்டு வழக்கில் சிக்கியவரை அமர வைப்பது… வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். தகுதியைத் தூக்கி எறிந்துவிட்டு, லஞ்சத்திற்கும் சிபாரிசுக்கும் தவெக அரசு மகுடம் சூட்டினால், அது மக்களாட்சியின் மாண்புக்கே விழுந்த மாபெரும் சாட்டையடி.
