Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு அரசியலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்களும், அவர்கள் தவெக இணைந்து வருவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த ராஜினாமாக்கள் தன்னிச்சையானவை அல்ல என்றும், தவெக தரப்பில் காட்டப்பட்ட ஆசை வார்த்தைகளால் நிகழ்ந்த அதிகார துஷ்பிரயோகம் என்றும் அதிமுக குற்றம் சாட்டுகிறது.

இச்சூழ்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உள்ள சட்ட ரீதியான பின்னணிகள், அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் திறனாய்வாளருமான முனைவர் திரு. தராசு ஷயாம் கூறுகையில், ”அரசியல் சாசனத்தின்படி, ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அளிக்கும் ராஜினாமா என்பது எந்தவிதமான வெளிப்புற அழுத்தமும் இன்றி, தன்னிச்சையாக அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்கள் தங்களின் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்தால் மட்டுமே அது தன்னிச்சையானது என்று சபாநாயகர் முடிவு செய்துவிட முடியாது. அரசியல் சாசன விதிமுறைகளின்படி, சபாநாயகர் ஒரு சிறிய விசாரணையை நடத்தி, அது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் தான் கொடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆசை வார்த்தைகளும், பேரங்களும்
ராஜினாமாவின் பின்னணியில் ஏதேனும் பேரங்களோ அல்லது ஆசை வார்த்தைகளோ இருப்பது தெரியவந்தால், அந்த ராஜினாமா தன்னிச்சையானது அல்ல என்று சபாநாயகர் அதை நிராகரிக்க சட்டத்தில் இடமுண்டு. தற்போது ராஜினாமா செய்துள்ள 4 எம்.எல்.ஏ-க்கள் மீது, முன்னதாக அதிமுக கட்சியின் கொரடா உத்தரவை மீறி, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மாற்றி ஓட்டளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 10-வது அட்டவணையின்படி அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

குற்றத்திலிருந்து தப்பிக்க ராஜினாமாவா?
இவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகர் வசம் நிலுவையில் இருந்தன. தங்களுக்கு எதிராக சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே இவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டம் என்ன சொல்கிறது என்றால், ஒரு குற்றச்சாட்டில் இருந்தோ அல்லது தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்தோ தங்களை தற்காத்துக் கொள்ள ராஜினாமாவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, அது தன்னிச்சையான ராஜினாமாவாகக் கருதப்படாது. சபாநாயகருக்கு இந்த விவகாரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தும், அவர் ஏன் உரிய விசாரணை நடத்தாமல் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார் என்ற மாபெரும் சட்டக் கேள்வி எழுந்துள்ளது

தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன்?
மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் காலி பணியிடங்களுக்கு இடைத்தேர்தல்களை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டின் இந்தத் தொகுதிகளுக்கு ஏன் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கான விடை இந்தச் சட்டச் சிக்கலில்தான் ஒளிந்துள்ளது. இந்த ராஜினாமாக்களில் உள்ள அப்பட்டமான விதிமீறல்களையும், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளையும் தேர்தல் ஆணையம் உணர்ந்துள்ளதால்தான், தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

வரலாற்று உதாரணங்கள்
கடந்த காலத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, ஜே.எம்.எம கட்சி எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சி முடிந்த பிறகு சிபிஐ நடத்திய விசாரணையில் அது நிரூபிக்கப்பட்டு, கீழமை நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியது. எனவே, நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும் ‘நியாயமான ஆட்டம்’ மற்றும் ‘சட்டத்தின் ஆட்சி’ மிக முக்கியம்.

ஓபிஎஸ் காலத்து 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் தனியாகச் செயல்பட்டனர். ஆனால், அவர்கள் சபாநாயகரிடம் செல்லாமல் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தை அணுகினர். தற்போதைய சூழலில், சபாநாயகர் தவெக-வைச் சேர்ந்தவர் என்பதால், அதிமுகவினர் உரிய நேரத்தில் சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற தவறியதும் இந்த இழுபறிக்கு ஒரு காரணம். இந்த அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களால் தற்போதைய நிலவரப்படி மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கப் போவது அந்தந்த தொகுதி வாக்காளர்கள்தான். தொகுதிக்கு மக்கள் பிரதிநிதி (எம்.எல்.ஏ) இல்லாததால் மக்கள் நலப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“இன்றைய தேதியில் அதிமுகவிற்கும், அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கும் கிடைத்துள்ள பிரதிபலன் என்னவென்றால்… அங்கு இடைத்தேர்தலும் கிடையாது, அவர்களுக்கு என்று ஒரு எம்.எல்.ஏ-வும் கிடையாது” என்கிறார் தராசு ஷயாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago