Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சூரத்தின் வரச்சா (Varachha) பகுதியில் அமைந்துள்ள, நகரின் மிகப்பெரிய மொபைல் மற்றும் மின்னணு சாதன விற்பனை மையமான பொத்தர் ஆர்கேட் (Poddar Arcade) வணிக வளாகம் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியது.

வெறும் 30 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால், வணிக வளாகத்தின் தரைத்தளம் முழுவதும் வெள்ளநீரில் மூழ்கி, முதல் தளம் வரை தண்ணீர் சூழ்ந்தது.

மழை தொடங்கிய சில நிமிடங்களிலேயே வணிக வளாகத்திற்குள் வெள்ளநீர் வேகமாக புகுந்ததால், வணிகர்கள் தங்களது பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முயன்றனர். ஆனால், நிலத்தடிப் பகுதியில் அமைந்திருந்த கடைகளுக்குள் அருவி போல் மழைநீர் புகுந்ததால், எந்தப் பொருளையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் மின்னணு சாதனக் கடைகள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கின. கடைகளில் வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஐபோன்கள், ஆண்ட்ராய்டு செல்போன்கள், கேஜெட்டுகள், உதிரிபாகங்கள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதையும் படியுங்க  "ஜனாதிபதி மாளிகையிலிருந்து அழைப்பு! ஆனா சோசியல் மீடியால செம டோஸ்! சாரு பாண்டேவின் 19 அரசு வேலை சர்ச்சை!

வெள்ளம் வடிந்த மறுநாள் கடைகளைத் திறந்து பார்த்த வணிகர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேறும் சகதியிலும் புதைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். சேதமடைந்த பொருட்கள் அனைத்தும் பின்னர் வீதிகளில் குப்பையாகக் கொட்டப்பட்டன.

இந்த வெள்ளப் பாதிப்பால் மட்டும், பொத்தர் ஆர்கேட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு சுமார் 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த வெள்ளப் பாதிப்புக்கு, அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் மழைநீர் வடிகால் அமைப்பு பாதிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மொபைல் சந்தை மட்டுமின்றி, சூரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜவுளிச் சந்தைகளிலும் வெள்ளநீர் புகுந்ததால், துணிகள் மற்றும் ஆடைகள் நனைந்து பெருமளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக, ஜவுளி வணிகத்திலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  “விவசாய கனவுடன் ஐடி வேலையை விட்ட இளைஞர்… மின்னல் தாக்கி பரிதாப பலி”

வெள்ளநீரால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சிக்கித் தவித்த பொதுமக்களை குஜராத் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், ஜூலை 8-ஆம் தேதி மிகக் குறுகிய நேரத்தில் பெய்த கனமழை நகரின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய வணிகம் ஒரே நாளில் சிதைந்துவிட்டதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், எல் நினோ (El Niño) தாக்கத்தால் இந்தியாவில் கடுமையான வறட்சி நிலவும் என்று சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் முன்பு எச்சரித்திருந்த நிலையில், சூரத் பகுதியில் வெறும் 24 மணி நேரத்தில் 32 சென்டிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் நகரின் இயல்பு வாழ்க்கை, வணிகம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago