தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தவெக இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தவெகதான் ஆட்சியைப் பிடிக்கிறது, அதன் தலைவர் விஜய் தான் முதலமைச்சர் ஆகிறார் என்கிற அசாத்திய நம்பிக்கையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை அவர்கள் விஜய்யின் மனதிலும் ஆழமாகப் புகுத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே தவெக முகாமில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
விஜய் தீவிர ஆலோசனை
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் குறித்து விவாதிக்க, விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையின்போது, “தேர்தல் முடிவுகளில் நமக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பெரும்பான்மை கிடைக்காமல் கணிசமான இடங்கள் மட்டுமே கிடைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை விஜய் முன்வைத்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக நிர்வாகிகள் முன்வைத்த ‘சீக்ரெட் மூவ்’ திட்டங்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைக்கும் வகையில் உள்ளன.

திமுக கூட்டணியை சிதைக்க சீக்ரெட் மூவ்
ஒருவேளை தவெக 100 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால், ஆட்சி அமைக்கத் தேவையான மீதமுள்ள இடங்களுக்காக திமுகவின் தோழமைக் கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக
கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான கூடுதல் இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியை முதல் வாய்ப்பாக அணுகலாம் என்பது இவர்களின் கணக்கு.
திமுகவின் தோழமைக் கட்சிகளிடம் சுமார் 20 இடங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவருவதன் மூலம் திமுகவின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் என நிர்வாகிகள் நம்புகிறார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது, அவர்கள் நிச்சயம் திமுகவை விட்டுவிட்டு தவெகவை ஆதரிப்பார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

பாஜகவுக்கு ஜெர்க்
திமுக கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்க மறுத்தால், அடுத்தகட்டமாக அதிமுகவின் பக்கம் கவனத்தைத் திருப்பத் திட்டமிட்டுள்ளனர். 100 இடங்கள் கிடைத்து தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த அதிமுக ஆதரவு என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை ஒதுக்கி வைத்தால் மட்டுமே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றித் தீர்மானிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்போதே எதையும் வெளிப்படையாக பேசவேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூட அதிமுகவிடம் பேசக் கூடாது என்றும் ரகசியம் காக்கப்படுகிறது.
யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால்..?
தவெக 40-50 இடங்களை மட்டுமே பெற்று, அதே சமயம் திமுக, அதிமுக ஆகிய இருவருமே பெரும்பான்மை பெற முடியாத சூழல் ஏற்பட்டால், தவெகவே அந்த ‘கிங் மேக்கர்’ இடத்தைப் பிடிக்கும். இந்த இக்கட்டான சூழலில் தவெக எடுக்கப்போகும் முடிவுகள் மிக முக்கியமானவை.
யாருக்கும் ஆதரவு அளிக்காமல் மௌனம் காத்தால், அது ‘மறு தேர்தலுக்கு’ வழிவகுக்கும். மறு தேர்தலில் தங்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆனால், மறு தேர்தலுக்குத் தவெகதான் காரணம் என்ற அவப்பெயர் வரக்கூடாது என நினைத்தால், பாஜகவுடன் தொடர்பில்லாத அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். இது மக்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு நல்ல இமேஜை உருவாக்கும்.

அடுத்தகட்டமாக, அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்குள் தவெக நேரடியாகப் பங்கேற்பதன் மூலம், அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களின் எதிர்கால அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம் எனப் பல ஆலோசனைகள் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளன.
நிச்சயம், ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியைப் போலவே, தேர்தல் முடிவுகளின் அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறது விஜய் டீம். இந்த ரகசியத் திட்டங்கள் நாளை வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எந்த மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
