Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள பிரபல ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 28 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

புஜியான் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரில் அமைந்துள்ள ஹுய்டெங் ஷூஸ் (Huiteng Shoes) தொழிற்சாலையில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று மதிய வேளையில் தொழிற்சாலையின் தரைத்தளத்தில் திடீரென தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷூ தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், பசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் அதிகளவில் இருந்ததால், தீ மிக வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பல அடுக்குகளைக் கொண்ட தொழிற்சாலையின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ, சில நிமிடங்களிலேயே மேல்தளங்களுக்கும் பரவியதால், அங்கு பணியில் இருந்த ஏராளமான ஊழியர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

சிலர் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் மேல்தளப் பகுதிகளில் நின்றபடி உதவி கோரிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்க  பற்றி எரியும் சீன கப்பல்..! ஈரான்- அமெரிக்காவிற்கு இடையே பதற்றம்..!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 35 அவசரகால வாகனங்களுடன் 180-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும், கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கிய சில ஊழியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும், உள்ளே சிக்கியுள்ளவர்களை முழு வீச்சில் மீட்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago