காதல் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவம். மனிதர்களுக்கு இடையிலான காதல் மட்டுமல்லாமல், இயற்கையின் மீதான அன்பும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.
அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொண்டுள்ள வித்தியாசமான முயற்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தில் பாயும் ஏவன் நதியின் நிலை குறித்து கவலை கொண்ட மெக் என்ற இளம்பெண், அந்த நதியைப் பாதுகாப்பதற்காக 2023ஆம் ஆண்டு ஏவன் நதியை அடையாளப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டார்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக நதியில் கலக்கப்படுவதால் ஏவன் நதி மாசடைந்து வருவதாகக் கூறிய அவர், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நதிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும் இந்த வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நதியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, தனது பெயரை மெக் ஏவன் என்று மாற்றிக்கொண்ட அவர், தன்னை ஏவன் நதியின் மனைவியாக அடையாளப்படுத்தி வருகிறார்.
நதியின் பாதுகாப்பு மற்றும் அதன் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர், தற்போது ஏவன் நதிக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் புதிய இயக்கம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இந்த முயற்சிக்காக, மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மெக் ஏவன் பணியாற்றி வருகிறார். இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் அவரது இந்த வித்தியாசமான முயற்சி, தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
