ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகளில், வரி அதிகாரிகளுக்கு தற்போது இருக்கும் நேரடி கைது அதிகாரத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்படி, ஜிஎஸ்டி அதிகாரிகள் தங்களது சொந்த முடிவின் அடிப்படையில் ஒருவரை நேரடியாக கைது செய்வதற்குப் பதிலாக, கைது நடவடிக்கைக்கு முன்பாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்படலாம்.
குற்றம் உறுதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் வழக்குகளில், நீதிமன்ற அனுமதியுடன் சட்ட அமலாக்க அமைப்புகள் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், “ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகளில் இனி கைது கிடையாது” என்பது அதிகாரப்பூர்வ முடிவு அல்ல. இது தற்போது பரிசீலனையில் இருக்கும் ஒரு சீர்திருத்த முன்மொழிவு மட்டுமே. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, வரி ஏய்ப்புக்காக கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச வரம்பை, தற்போதுள்ள ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது, ரூ.5 கோடிக்கும் குறைவான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகள் கிரிமினல் நீதிமன்றங்களுக்கு செல்வது குறையும். இதன் மூலம் சிறிய அளவிலான வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு ஏற்படும் சுமையையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், கைது அதிகாரத்தில் மாற்றம் வந்தாலும், வரி அதிகாரிகளின் வரி வசூல் மற்றும் அபராதம் விதிக்கும் அதிகாரங்களில் மாற்றம் இருக்காது. வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால், வரியை வசூலிப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அதிகாரம் இருக்கும்.
இந்த மாற்றங்களை மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 69-ல் கொண்டுவருவது குறித்து சட்டக் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முன்மொழிவுகள் வரவிருக்கும் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும், இறுதி முடிவு எடுக்க மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இந்த விவகாரத்தில் சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு, வணிகர்கள் அச்சமின்றி தொழில் செய்யும் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை பரிசீலித்து வரும் நிலையில், குறைந்தது 5 முக்கிய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது அதிகாரத்தை முழுமையாக நீக்கினால், பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, ஜிஎஸ்டி அமலாக்க அமைப்பு “பல் இல்லாத புலி” போல மாறிவிடும் என்பது அந்த மாநிலங்களின் கவலை.
எனவே, கைது அதிகாரத்தை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக, மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு அல்லது மோசடி செய்பவர்களுக்கு மட்டும் “சிவில் கைது” போன்ற நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, போலி பில்கள் உள்ளிட்ட வரி மோசடிகளை கண்டுபிடிப்பது தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் கைது அதிகாரமும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், இன்வாய்ஸ் மேட்சிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் யார் வரி ஏய்ப்பு செய்கிறார்கள், எங்கு மோசடி நடைபெறுகிறது என்பதை கணினி வழியாகவே கண்டறிய முடிகிறது.
இதனால், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக அதிகாரிகள் கைது செய்வார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாக மத்திய அரசு கருதுகிறது.
வரி வசூல் செய்வதும், அபராதம் விதிப்பதும் வரி அதிகாரிகளின் முக்கியப் பணி என்றும், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை சட்ட அமலாக்க அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் மத்திய நிதி அமைச்சகத்தின் அணுகுமுறையாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களுடன், “ஜிஎஸ்டி 2.0” என்ற அடுத்தகட்ட சீர்திருத்தத்தின் கீழ் வணிகர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள சுமார் 24 தண்டனைக்குரிய குற்றங்களை மறுஆய்வு செய்யவும், அவற்றில் 9 வகையான சிறிய குற்றங்களை கிரிமினல் குற்றங்களின் பட்டியலில் இருந்து நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நடுத்தர அளவிலான குற்றங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான மிகச்சிறிய ஜிஎஸ்டி நோட்டீஸ்களை ரத்து செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
இதில் மற்றொரு முக்கியமான மாற்றமாக, நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
உதாரணமாக, ஒரு வணிகர் முறையாக ஜிஎஸ்டி செலுத்தி, ஒரு சப்ளையரிடம் இருந்து பொருளை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சப்ளையர் பின்னர் அரசுக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டால், தற்போது அந்த பொருளை வாங்கிய நேர்மையான வணிகரின் இன்புட் டேக்ஸ் கிரெடிட் எனப்படும் ITC பாதிக்கப்படுவதற்கான சூழல் ஏற்படலாம்.
சில நேரங்களில், எந்தத் தவறும் செய்யாத அந்த வணிகரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, கைது அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
புதிய சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், தவறு செய்த சப்ளையர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்து, நேர்மையாக வணிகம் செய்தவர்களுக்கு ITC உள்ளிட்ட வரிச் சலுகைகளைப் பாதுகாக்கும் வகையில் விதிகள் மாற்றப்படலாம்.
அதேபோல், வரி சட்டங்கள் மிகவும் சிக்கலானவை என்பதால், ஒரு பொருளை எந்த வரி விகிதத்தில் வகைப்படுத்துவது அல்லது அதன் மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் அதிகாரிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம்.
இது போன்ற சாதாரண கணக்கு அல்லது வரி தொடர்பான தவறுகளை கிரிமினல் குற்றமாக கருதாமல், அவற்றுக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படலாம்.
இதன் மூலம், சாதாரண தொழில்முறை தவறுகளையும், திட்டமிட்டு செய்யப்படும் மிகப்பெரிய வரி மோசடிகளையும் தனித்தனியாக கையாள முடியும்.
அதேநேரத்தில், ஜிஎஸ்டி சட்டத்தில் கைது நடைமுறை மாற்றப்பட்டாலும், திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் போலி பில்களை உருவாக்கி அரசை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்.
அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்தியாவின் பொதுவான குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் BNS சட்டத்தின் கீழ், காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிறிய அளவிலான வரி மற்றும் கணக்கு தொடர்பான பிரச்சினைகளை கிரிமினல் வழக்குகளாக மாற்றாமல் இருப்பது, நேர்மையான வணிகர்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தலைக் குறைப்பது, நீதிமன்றங்களின் சுமையை குறைப்பது ஆகியவை இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகின்றன.
அதேநேரத்தில், திட்டமிட்டு மிகப்பெரிய அளவில் வரி மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் வகையிலும் இந்த மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இவை அனைத்தும் தற்போது பரிசீலனையில் உள்ள முன்மொழிவுகள் மட்டுமே. மாநிலங்களின் கருத்துகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு, 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமா, அல்லது இந்த முன்மொழிவுகள் மாற்றப்படுமா என்பது தெரியவரும்.
