2027-ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது. வலுவான உள்நாட்டு நுகர்வு, முதலீடுகள், உற்பத்தித்துறை மீட்சி மற்றும் சாதகமான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலில் பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகள் நீடித்து வரும் நிலையிலும், இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது உலக வங்கி முன்பு கணித்திருந்த அளவை விட அதிகமாக இருந்ததால், ஒட்டுமொத்த நிதியாண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 6.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சேவைத்துறை முதல் காலாண்டில் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேபோல், உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சார உற்பத்தித் துறைகளின் சிறப்பான செயல்பாடுகளால் தொழிற்துறை 7.2 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
வலுவான விவசாயச் செயல்பாடு, கிராமப்புற வருமானத்துக்கு கிடைத்த ஆதரவு மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக ஆரம்பகட்டத்தில் கிராமப்புற நுகர்வு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி வரிக் குறைப்புகளால் ஆண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற நுகர்வும் கணிசமாக வலுவடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது.

அதே நேரத்தில், இந்திய பொருளாதாரத்திற்கு சில வெளிப்புற சவால்கள் இருப்பதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை நிலவிய தென்மேற்கு பருவமழைப் பற்றாக்குறை வேளாண் துறையை ஓரளவு பாதித்துள்ளதால், அது கிராமப்புறத் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறிப்பாக மேற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், இந்தியாவின் எரிபொருள் விநியோகம் மற்றும் பணவீக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சவால்கள் மற்றும் எரிபொருள் விநியோகத் தடைகள் சீரடையும் பட்சத்தில், 2027-28 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் என்றும், 2028-29 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
உலக வங்கி மட்டுமின்றி, எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ், ஃபிட்ச் ரேட்டிங்ஸ், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகிய முன்னணி சர்வதேச நிறுவனங்களும் இந்தியாவின் நடப்பு நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரையிலான அளவுக்கு உயர்த்தியுள்ளன.
AI தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு 10-வது இடம்
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத் திறனையும் உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பாக பாராட்டியுள்ளது.
உலகளவில் AI தொழில்நுட்பத்துக்கு தயாராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கியின் AI Readiness Index தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் சுமார் 23.4 சதவீத நிறுவனங்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக உலக வங்கி ஆய்வு கூறுகிறது.
பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டிய பிறகு, அதற்கு மேல் முன்னேற முடியாமல் ‘நடுத்தர வருமானப் பொறி’ எனப்படும் சுழலில் சிக்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தியா இந்த நிலையைத் தவிர்த்து தொடர்ந்து முன்னேறும் வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் இந்திய இயக்குநர் அகஸ்டே குவாமே கூறுகையில், சவாலான சூழ்நிலைகளிலும் இந்தியா சிறப்பான பொருளாதார செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைய வாய்ப்பில்லாததால், நாடு நடுத்தர வருமானப் பொறியில் சிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையும் கணிசமாகக் குறைந்துள்ளது
உலக வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவில் தீவிர வறுமையின் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
தினசரி வருமானக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவில் தீவிர வறுமையின் அளவு 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள், போர் பதற்றங்கள் உள்ளிட்ட நிச்சயமற்ற சூழ்நிலைகள் நீடித்தாலும், தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் செயல்பாடு முக்கியப் பங்களிப்பை வழங்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
அதன்படி, தெற்காசிய பிராந்தியம் 2026-ம் ஆண்டில் 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, உலகின் மிக வேகமாக வளரும் வளர்ந்து வரும் சந்தைப் பிராந்தியமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவின் 7.1 சதவீத பொருளாதார வளர்ச்சி முக்கியப் பங்களிப்பாக அமையும்.
