தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒன்றாக அமர்ந்து, அனைத்தும் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தாலும், அந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்
மும்பையை மையமாகக் கொண்டு காக்ரோச் ஜனதா பார்ட்டி என குறிப்பிடப்படும் CJP போராட்டத்தை தொடங்கிய நிலையில், தற்போது இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக “ஜனநாயகத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, வாக்காளர் பட்டியலின் நடவடிக்கை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையே இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

தர்மேந்திர பிரதான் விவகாரம் போல் நீடிக்க வேண்டாம்
இந்த சூழலில், தர்மேந்திர பிரதான் விவகாரம் போன்று இந்தப் பிரச்சினையையும் கடைசி வரை இழுத்துச் செல்ல வேண்டாம் என மத்திய அரசு யோசித்து வருவதாகவும், இதற்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என்ற ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாறாக, அவரை பதவி விலக வலியுறுத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒரு லட்சம் பேர் போராட்டம்
அரசு இந்த விவகாரத்தில் “பிரஸ்டீஜ்” பார்த்து சுமூகமான முடிவை எடுக்காமல் போனால், டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை CJP சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படலாம். இதுபோன்ற மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தாமாக முன்வந்து பதவி விலக வைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கலாம்.
இதற்கிடையே, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் 7ஆம் தேதியும் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

அடுத்தது என்ன?
ஒருபுறம் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வரும் நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஞானேஷ் குமாரின் பதவியை குறிவைத்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனால், இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையுமா? போராட்டங்களை சமாளிக்க மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது? ஞானேஷ் குமார் தனது பதவியில் தொடர்வாரா அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் வேறு முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
