இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த தவெக எம்எல்ஏக்கள் மத்தியில், “அமைச்சரவை மாற்றமா? அல்லது இலாகா மாற்றமா?” என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தல் பணிகளால் தவெக அமைச்சர்கள் களைத்துப் போயிருந்தாலும், அமைச்சரவையில் முதல்வர் மாற்றங்களை செய்யப் போகிறார் என்ற தகவல், குறிப்பாக ஜூனியர் அமைச்சர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்த ரகசிய தகவல் வெளியான நிலையில், தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு தவெக எம்எல்ஏக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேசியதாக கூறப்படும் மத்திய, மாநில உளவுத்துறை வட்டாரங்கள், இடைத்தேர்தல் முடிவுகளை ஒட்டி சில முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர் விஜய் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக அமைச்சரவை மாற்றம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கைது, ஆட்சிக்கு ஆதரவு தரும் இடதுசாரி கட்சிகளிடம் சில கெடுபிடிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இடைத்தேர்தலில் தவெக பெறும் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்து இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசியல் – நிர்வாக நெருக்கடி
ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், நிர்வாக நெருக்கடி- அரசியல் நெருக்கடி என இரண்டையும் ஒருசேர முதல்வர் விஜய் எதிர்கொண்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நெருக்கடிகளை விஜயால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றும், தோல்வியை எதிர்கொள்வதில் அவருக்கு சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயைப் பொறுத்தவரை தான் சந்திக்கும் எந்த அரசியல் சூழலும் வெற்றியைத் தர வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான் ஆட்சி நிர்வாகத்தையும், அரசியல் சூழலையும் விஜய் கையாள்வதாகவும், இதன் காரணமாக அவருக்கு எதிரான எதிர்மறை அரசியல் வளரத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்களை கண்காணிக்கும் உளவுத்துறை
தனது ஆட்சியில் தன்னைத் தவிர வேறு எந்த அதிகார மையமும் இருக்கக்கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தி வந்தாலும், ஒவ்வொரு அமைச்சரிடத்திலும் தனித்தனி அதிகார மையங்கள் செயல்பட்டு வருவதாக அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமைச்சர்களை கண்காணிக்க உளவுத்துறையிடம் சமீபத்தில் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி அமைச்சர்கள் மட்டுமின்றி, அவர்களின் தனி உதவியாளர்கள் எனப்படும் பி.ஏ.க்கள், அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
விஜயின் ஆலோசகர்களும் இந்த கண்காணிப்பில் இருந்து தப்பவில்லை.
அமைச்சர்களிடையே சீனியர், ஜூனியர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் குறித்த முதற்கட்ட அறிக்கை விஜயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் ரகசிய சந்திப்புகள்
அலுவலகப் பணிகளை முடித்துக்கொண்டு தனது இல்லத்துக்கு திரும்பும் விஜய், இரவு 8 மணிக்கு மேல் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை. ஆனால், உளவுத்துறை, ஆட்சி நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பில்லாத ஓரிருவரிடம் அவர் பேசுவதாகவும், அந்த சந்திப்புகளின்போதுதான் பல்வேறு தகவல்கள் அவரிடம் பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குக்கூட தெரியாமல் ரகசிய தகவல்களை தெரிந்துகொள்ள தனிப்பட்ட சில தகவல் ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்ற பாணியில் விஜய் செயல்படுகிறார். இதன் மூலம் பல முக்கியமான தகவல்களை அவர் தெரிந்துகொள்கிறார்.
அமைச்சர்களின் வருமான ரிப்போர்ட்
அமைச்சர்களின் உறவினர்கள் மேற்கொள்வதாக கூறப்படும் அதிகார நடவடிக்கைகள், அமைச்சர்கள், அவர்களின் பி.ஏ.க்களின் சமீபகால வருமான வளர்ச்சி குறித்த தகவல்கள் விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில தகவல்கள் முதல்வர் விஜயாலேயே நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சில சீனியர் அமைச்சர்கள் தங்களது துறைகளின் உயரதிகாரிகளிடம், கடந்த திமுக ஆட்சியில் டெண்டர்களில் என்ன நடைமுறைகள் கையாளப்பட்டனவோ, அதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
டெண்டர் மதிப்பீட்டுத் தொகையைப் பொறுத்து சதவீதத்தை அதிகாரிகளே தீர்மானித்து, ஒப்பந்ததாரர்களிடம் பேசி, யாருக்கு வேண்டுமானாலும் டெண்டரை ஒதுக்கலாம் என்றும், ஆனால் எந்த இடத்திலும் அமைச்சர்களின் பெயர் முன்னிலைப்படுத்தப்படக்கூடாது என்றும் சில அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சதவீதம் தங்களுக்கும் வந்து சேர வேண்டும் என சில அமைச்சர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, தாங்கள் நேரடியாக இதில் ஈடுபடாதது போல் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு தகவல்கள் முதல்வர் விஜயிடம் சென்றுள்ளன.

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?
இந்த பின்னணியில்தான் அமைச்சரவையை மாற்றியமைக்க விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களில் தங்களது துறைகளில் போதிய செயல்பாடுகளை வெளிப்படுத்தாத அமைச்சர்கள், உறவினர்கள் மூலம் ஊழலில் கவனம் செலுத்துவதாக கூறப்படும் அமைச்சர்கள், ஒப்பந்ததாரர்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்ந்து முரண்படுவதாக கூறப்படும் அமைச்சர்கள் என ஒரு பெரிய பட்டியல் விஜயிடம் வழங்கப்பட்டுள்ளதாக உளவு வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில், பெண் அமைச்சர் ஒருவரும், மேலும் இரு அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இருந்து சிலருக்கு நீக்கம் அல்லது பதவி மாற்றம், மேலும் சிலருக்கு இலாகா மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த மாற்றங்கள் குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், இடைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், தவெக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா? யார் அமைச்சரவையில் நீடிப்பார்கள்? யாருக்கு இலாகா மாற்றம் அல்லது பதவி பறிப்பு ஏற்படும்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
