மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை தமிழகமே உற்றுநோக்கி காத்திருக்கிறது. இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஒட்டியே தமிழக அரசியல் களம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் அரசியல் களம் எப்படி மாறும்? ஒரு தொகுதியில் தவெக வெற்றியை இழந்தாலும் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் தற்போது அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்.?
இந்த இடைத்தேர்தலில் தவெக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் ஆதாயமாக அமையும். குறிப்பாக, ஆளுங்கட்சியான தவெக இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றினால், மக்கள் மத்தியில் முதலமைச்சர் விஜயின் செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பதற்கான சூழல் உருவாகலாம்.
அதேபோல், தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெக பக்கம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் தவெக பக்கம் இணைந்துள்ள நிலையில், இடைத்தேர்தல் முடிவு தவெகவுக்கு சாதகமாக அமைந்தால், பிற கட்சிகளில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளும் அக்கட்சியில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது.
விஜய் வந்தாலே வெற்றி பிம்பம் உருவாகுமா?
தேர்தல் முடிவுக்கு பிறகு, தவெக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், முதலமைச்சர் விஜயின் பிரச்சாரத்தை முன்வைத்து பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் குறுகிய நேரம் பிரச்சாரம் மேற்கொண்டதற்கே குறிப்பிட்ட தொகுதிகளில் ஏற்பட்ட அரசியல் தாக்கத்தை எடுத்துக்காட்டி, விஜய் வந்தாலே வெற்றி என்ற ஒரு சூழல் உருவாகி வருவதாக அவர்கள் பேசியிருந்தனர்.
அதேபோன்ற ஒரு அரசியல் பிம்பம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் உருவாகுமா? என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், தமிழக அரசியல் களத்தில் அக்கட்சி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்ற அரசியல் கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும் தாக்கம்?
அதே நேரத்தில், தவெக போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும், அது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தவெக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் சூழல் ஏற்படலாம். ஆனால் ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டால், தமிழக அரசியல் களத்தில் மும்முனைப் போட்டி தொடரும் என்ற நிலை வலுப்பெறலாம்.
இதனால், இரண்டு தொகுதிகளின் முடிவுகளும் தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலுக்காக விஜயின் தீவிர பிரச்சாரம்
பொதுத்தேர்தலின்போது பல தொகுதிகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளாத முதலமைச்சர் விஜய், இந்த இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் தலா இரண்டு நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வழக்கத்துக்கு மாறாக பொதுமக்களிடம் நேரடியாக சென்று பேசினார். பொதுமக்களுடன் டீ குடித்தார். மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார். விவசாயிகளுடன் பேசினார்.. வயல்களில் விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டார்.
இப்படி வழக்கமான அரசியல் பிரச்சார முறையைவிட மாறுபட்ட வகையில், இந்த இடைத்தேர்தலில் விஜய் அதிகளவில் களத்தில் இறங்கினார். இதனால், இந்த அளவுக்கு பெரிய உழைப்பை மேற்கொண்ட பின்னரும் இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தவெக தோல்வியடைந்தால், “இவ்வளவு பெரிய பிரச்சாரமும் ஏன் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை?” என்ற கேள்வி எழும்.
எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் எடுபட்டதா?
ஒரு தொகுதியில் தவெக தோல்வியடைந்தாலும், அதன் பின்னணியில் மக்கள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகியுள்ளதா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழும். குறிப்பாக, கடந்த நான்கு மாத ஆட்சிக் காலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராக முன்வைத்த பல்வேறு விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டுவிட்டனவா? என்ற விவாதமும் உருவாகலாம்.
திமுக கடந்த நான்கு மாத காலத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயல்படும் என்ற அரசியல் பார்வையும் நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த எதிர்ப்பு பிரச்சாரம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கும் மதுராந்தகம், தாராபுரம் முடிவுகள் ஒரு அளவுகோலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசியலில் என்ன மாற்றம்?
தவெகவைப் பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தலில் வெற்றி அல்லது தோல்வியை பகுப்பாய்வு செய்ய பல்வேறு காரணிகள் உள்ளன. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தால், தவெக அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர்கிறது என்ற அரசியல் செய்தியை அக்கட்சி முன்வைக்க முடியும். அதே நேரத்தில், பிற கட்சிகளில் இருந்து முக்கிய அரசியல் புள்ளிகள் தவெக பக்கம் வருவதற்கான சூழலும் உருவாகலாம்.
ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டால், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதா? என்ற விவாதம் உருவாகலாம். மேலும், தமிழக அரசியலில் மும்முனைப் போட்டி தொடரும் என்ற நிலையும் வலுப்பெறலாம்.
இதனால் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இரண்டு தொகுதிகளுக்கான வெற்றி, தோல்வி என்ற எல்லையைத் தாண்டி, தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.
