Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Bharathi Subbarayan

திருப்பூரைச் சேர்ந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், தனது அமைப்பினருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். பாரதி சுப்பராயனை மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் நவீன மனிதர்கள் அமைப்பின் நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனின் மகனான பாரதி சுப்பராயன், இடதுசாரி சித்தாந்தப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தனக்கென சமூக மற்றும் பகுத்தறிவுச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ‘நவீன மனிதர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.

ஊடக விவாதங்களில் தொடர்ந்து பகுத்தறிவு மற்றும் சமூகக் கருத்துகளை முன்வைத்து வந்த பாரதி சுப்பராயன், அண்மைக் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் சில கொள்கைகளை விமர்சித்து பேசி வந்தார். இந்த நிலையில், தேர்தல் அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நேரத்தில் அவர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  விஜய்யை உசுப்பிய திருமா… திமுக போட்ட ‘திருச்சி ஸ்கெட்ச்’ க்ளோஸ்..? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி சுப்பராயன், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

Bharathi Subbarayan

அவர் கூறியதாவது:

“இன்றைய சூழலில் அரசியலின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர், நடிகராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு போஸ்டர் ஒட்டியவர்களும், அவருடைய கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தவர்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் சரியான நிர்வாகத்தை வழங்க முடியாத நிலை உள்ளது.

அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் இல்லாததால், அரசியல் களம் மேலும் தரம் தாழ்ந்து வருகிறது. அதனால்தான் பல இடங்களில் வெறும் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவது போன்ற அணுகுமுறையும், முதலமைச்சர் உள்ளிட்டோர் சில அசிங்கமான செயல்களில் ஈடுபடுவது போன்ற சூழலும் காணப்படுகிறது. இதைத் தாண்டி அரசியல் பேசுவதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை.

அரசியலின் தரம் குறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் உயர்த்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கும் உள்ளது. அதை திமுகவால் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். அதற்காகத்தான் நாங்களும் ‘நவீன மனிதர்கள்’ அமைப்பில் இருந்து திமுகவில் இணைகிறோம். திமுகவுடன் இணைந்து எங்களுடைய சமூகப் பணிகளைத் தொடர விரும்புகிறோம்.

இதையும் படியுங்க  "ஸ்டாலின் எனக்கு போன் போட்டார்… தி.மு.க - அ.தி.மு.க இணையப் போகுது! புயலை கிளப்பிய சி.டி.ஆர்.நிர்மல் குமார்..!

அதேபோல், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதிக்கச் சிந்தனைகள் இன்றும் தொடர்கின்றன. சாதி ஆதிக்கம், மொழி ஆதிக்கம் ஆகியவை இருக்கின்றன. மாநில உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் சரியான கொள்கைகளை வகுத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்கள் மாறினாலும் அந்தக் கொள்கைகளை நோக்கிப் பயணித்த இயக்கமாக திமுக உள்ளது.

எங்களுக்கும் அதே கொள்கைகள் இருப்பதால், அந்தக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக திமுகவில் இணைந்துள்ளோம்.” என பாரதி சுப்பராயன் தெரிவித்தார்.

பாரதி சுப்பராயன் தலைமையில் செயல்பட்டு வந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு, சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை முன்வைத்து பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

பொதுவாக மாவட்ட அளவிலான அமைப்பினர் ஒரு கட்சியில் இணையும்போது, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அல்லது உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலையில் இணைவது வழக்கம். ஆனால், பாரதி சுப்பராயன் மற்றும் நவீன மனிதர்கள் அமைப்பினரின் இந்த இணைவு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முன்னிலையில் இருந்து நடைபெற்றுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  "3 நாள் டைம்… மன்னிப்பு கேளுங்க, இல்லனா கோர்ட்டை பாருங்க!" – பல்லவிக்கு பறந்த அதிரடி நோட்டீஸ்!

இதன் மூலம், திருப்பூரைச் சேர்ந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு தனது அரசியல் பயணத்தை திமுகவுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago

You missed