இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகுவின் சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புக்காக கடந்த 7 ஆண்டுகளில் சுமார் ரூ.4.49 கோடி, அதாவது 4 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 90 சதவீத செலவுகள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகுவுக்காகவே செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் தானாக முன்வந்து இஸ்ரேல் அரசால் வெளியிடப்படவில்லை. ‘தகவல் அறியும் உரிமைக்கான இயக்கம்’ (Movement for Freedom of Information) சார்பில் வழக்கறிஞர் யாரா விங்க்லர்-ஷாலிட் 2025 டிசம்பரில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகே இந்த வரவு-செலவு கணக்குகள் பொதுவெளிக்கு வந்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்த காலகட்டத்திலும் பிரதமரின் சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புக்காக அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் பிரதமரின் சிகை அலங்காரத்துக்காக சுமார் 2,600 டாலர், அதாவது ரூ.2.1 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் மேக்கப்புக்காக 1,580 டாலர், அதாவது சுமார் ரூ.1.3 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல் போர் தீவிரமடைந்த காலத்தில் மட்டும் பிரதமரின் சிகை அலங்காரத்துக்காக மாதத்திற்கு சுமார் 68,000 ரூபாய், அதாவது 810 டாலர் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நெதன்யாகுவின் வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்தச் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, 2025-ம் ஆண்டில் மட்டும் மேக்கப் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக ரூ.1 கோடிக்கும் மேல், அதாவது சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரியில் அவர் வாஷிங்டன் டி.சி. சென்றிருந்தபோது, அங்குள்ள ஒப்பனைக் கலைஞர்களுக்காக மட்டும் ரூ.11.2 லட்சம், அதாவது 13,500 டாலர் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், 2024 ஜூலை மாதம் மேற்கொண்ட பயணத்தின்போது சுமார் ரூ.9.6 லட்சம், அதாவது 11,500 டாலர் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நெதன்யாகுவின் மேக்கப் மற்றும் சிகை அலங்காரச் செலவுகள் அனைத்து மாதங்களிலும் ஒரே சீராக இருந்ததில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் முக்கியமான பயணங்களின்போது இந்தச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. சில குறிப்பிட்ட மாதங்களில் சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புக்காக மட்டும் மாதத்திற்கு 6,700 டாலர் வரை, அதாவது சுமார் ரூ.5.5 லட்சம் வரை மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 முதல் 2026 வரையிலான இந்த 7 ஆண்டு காலகட்டத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தவிர நாஃப்தாலி பென்னட் மற்றும் யாயர் லாபிட் ஆகியோரும் இஸ்ரேல் பிரதமர்களாகப் பதவி வகித்துள்ளனர். அவர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவச் செலவுகள், குறிப்பாக ஆடைகள் மற்றும் விருந்தோம்பல் தொடர்பான செலவுகளுடன் ஒப்பிடும்போது, நெதன்யாகுவின் செலவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவச் செலவு சுமார் ரூ.1.12 கோடி, அதாவது 1.34 லட்சம் டாலராகவும், நாஃப்தாலி பென்னட்டின் செலவு சுமார் ரூ.16 லட்சம், அதாவது 19,000 டாலராகவும், யாயர் லாபிட்டின் செலவு வெறும் ரூ.2.1 லட்சம், அதாவது 2,600 டாலராகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த தொகையில் நெதன்யாகு தம்பதியினரே 90 சதவீதத்துக்கும் அதிகமான செலவுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நெதன்யாகு மற்றும் சாரா நெதன்யாகுவுக்கு சிகை அலங்காரம் மற்றும் மேக்கப் சேவைகளை வழங்கிய ஹேர் ஸ்டைலிஸ்டுகள் மற்றும் மேக்கப் கலைஞர்களின் பெயர்களை வெளியிட இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் ஆதரவாளர்கள், இஸ்ரேல் பிரதமர் சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், அவரது தோற்றம் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கான தயாரிப்புகள் முக்கியமானவை என்று வாதாடுகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் போதும், சர்வதேச ஊடகங்களை எதிர்கொள்ளும் போதும் பிரதமரின் சர்வதேச பிம்பத்தைப் பராமரிப்பதற்காகத் தரமான சிகை அலங்காரம் மற்றும் மேக்கப் சேவைகள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இஸ்ரேல் கடுமையான போர்ச் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்திலும் அழுத்தம் நிலவி வரும் நேரத்தில், பிரதமர் மற்றும் அவரது மனைவியின் சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புக்காக மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்வது தேவையற்ற ஆடம்பரம் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்ததாக சாரா நெதன்யாகு மீது புகார்கள் எழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்தது, ஆடம்பரமான சலவை சேவைகளைப் பயன்படுத்தியது போன்ற புகார்களில் அவர் சிக்கியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள மேக்கப் மற்றும் சிகை அலங்காரச் செலவுகளிலும் நெதன்யாகு தம்பதியினர் 90 சதவீதத்துக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மேக்கப் செலவு விவகாரத்தை இஸ்ரேல் மக்கள், நெதன்யாகுவின் பழைய ‘ஐஸ்கிரீம் சர்ச்சையுடன்’ ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் இல்லத்திற்காக அரசு நிதியில் இருந்து ஆண்டுக்கு 2,700 டாலர், அதாவது சுமார் ரூ.2.2 லட்சம் வெறும் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தற்போது சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புக்காக வெளியாகியுள்ள பல லட்சம் டாலர் செலவுத் தகவல்களும் அந்தப் பழைய சர்ச்சையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
போர்க் காலத்தில் இஸ்ரேல் பிரதமர் உலக நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சர்வதேச ஊடகங்களின் கேமராக்கள் எப்போதும் அவர் மீது கவனம் செலுத்துகின்றன. இதனால், நெதன்யாகு தனது தோற்றத்தை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் காட்டிக்கொள்வதற்காக சர்வதேச தரத்திலான ஒப்பனைக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறார் என்றும், குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களின்போது இதற்கான செலவுகள் அதிகரிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான 7 ஆண்டு காலகட்டத்தில் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகுவின் சிகை அலங்காரம், மேக்கப் மற்றும் தொடர்புடைய அதிகாரப்பூர்வ செலவுகளுக்காக சுமார் ரூ.4.49 கோடி, அதாவது 4 லட்சத்து 70 ஆயிரம் டாலர் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருப்பது தற்போது இஸ்ரேலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
