ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், நாட்டின் 60-வது சுதந்திர தினக் கொண்டாட்ட விருந்திற்காக 23 யானைகளைக் கொன்று, அவற்றின் கறியைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 30-ஆம் தேதி போட்ஸ்வானா முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரம்பரிய முறையில் ஊர்ப் பொதுமக்களுக்கு பெரிய அளவில் விருந்து வழங்குவதற்காக, வனப்பகுதிகளில் இருந்து 23 யானைகளை வேட்டையாட அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உரிமம் வழங்கியது.
நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு இந்த 23 யானைகளும் வேட்டையாடும் வகையில் ஒதுக்கப்பட்டன. வேட்டையாடப்பட்ட யானைகளின் கறியை உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது.
அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல்களைச் சுற்றி பொதுமக்கள் கத்திகளுடன் கூடி, அதன் கறியை வெட்டி எடுத்துச் செல்லும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஒருசில இடங்களில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலேயே இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யானைக் கறியை மக்கள் நேரடியாக வெட்டி எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மாற்று வழிமுறையில் பொட்டலங்களாக விநியோகித்திருக்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிமாசிகு மாபுலங்கா உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளனர்.
போட்ஸ்வானா அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகெங்கிலும் உள்ள விலங்கு நல ஆர்வலர்களும், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போட்ஸ்வானாவின் யானைகள் பாதுகாப்பு சங்கம் எனப்படும் Elephant Protection Society உள்ளிட்ட அமைப்புகள், இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சட்டவிரோத யானை வேட்டையாளர்களான Poachers-க்கு மறைமுக ஆதரவாக மாறிவிடும் என எச்சரித்துள்ளன. அரசாங்கமே யானைகளை வேட்டையாட அனுமதிப்பது, யானைகளை வேட்டையாடுவதை நியாயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் அதிக அளவிலான யானைகள் வாழும் நாடாக போட்ஸ்வானா உள்ளது. அந்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் யானைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மனித–யானை மோதல்களைக் கட்டுப்படுத்தவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட வேட்டையாடுதல் முறையை அரசு ஒரு உத்தியாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யானைகளை வேட்டையாட இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்ட இந்தச் சிறப்பு உத்தரவில், வெறும் 23 யானைகள் மட்டுமன்றி, கொண்டாட்ட விருந்திற்காக டஜன் கணக்கான காட்டு மான்களையும் வேட்டையாட அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. வேட்டையாடப்படும் விலங்குகளின் கறியை உள்ளூர் மக்களுக்கு வழங்குவதன் மூலம், கிராமப்புற மக்களுக்கு உணவாகவும், பாரம்பரிய முறையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இது அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போட்ஸ்வானாவில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் எனப்படும் Foot-and-Mouth Disease பரவி வரும் நிலையில், யானைக் கறியைப் பொது இடங்களில் விநியோகிப்பது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடும் என அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல்களைச் சுற்றி மக்கள் கூட்டமாக நின்று கத்திகளைப் பயன்படுத்தி கறியை வெட்டி எடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் எழுந்துள்ளன.
போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாடுவதற்கான தனிநபர் உரிமங்கள், சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன. ஒரு யானையை வேட்டையாடுவதற்கான உரிமத்திற்கு தலா 50 ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வேட்டை மூலம் கிடைக்கும் நிதியை கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காகவும், உள்ளூர் சமூகங்களின் நலனுக்காகவும் பயன்படுத்துவதாக போட்ஸ்வானா அரசு கூறுகிறது.
போட்ஸ்வானா அரசுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே யானை வேட்டை தொடர்பாக நீண்டகாலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு, யானைகளை வேட்டையாடி அவற்றின் தந்தம் உள்ளிட்ட உடல் பாகங்களை நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லும் Trophy Hunting எனப்படும் முறைக்கு ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜெர்மனி, தடை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அப்போது போட்ஸ்வானா அதிபராக இருந்த மொக்வீட்ஸி மசிசி, ஐரோப்பிய நாடுகளுக்கு கடுமையான சவால் விடுத்திருந்தார். “எங்கள் நாட்டின் நிலைமை தெரியாமல் பேசாதீர்கள். வேண்டுமானால் 20 ஆயிரம் யானைகளை லண்டனுக்கும் ஜெர்மனிக்கும் பரிசாக அனுப்புகிறோம்.
அவற்றை உங்கள் நாட்டுப் பூங்காக்களில் விட்டு, எப்படிப் பராமரிப்பது என்று நீங்களே பாருங்கள்!” என்று அவர் கூறியிருந்தார். போட்ஸ்வானாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதையும் எடுத்துக்காட்டவே அவர் இவ்வாறு சவால் விடுத்திருந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, போட்ஸ்வானாவின் யானைகள் பாதுகாப்பு சங்கம் முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த நினைவாற்றல் கொண்ட விலங்குகள் என்பதால், ஒரு கூட்டத்தில் இருந்து ஒரு யானை சுட்டுக் கொல்லப்பட்டால், எஞ்சியிருக்கும் யானைகள் மனிதர்கள் மீது கடுமையான கோபமும் ஆக்ரோஷமும் கொள்ளக்கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மீது யானைகள் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போட்ஸ்வானாவின் முன்னாள் அதிபரான இயன் காமாவும் தற்போதைய அரசின் இந்த முடிவை பகிரங்கமாக எதிர்த்துள்ளார். 2008 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த இயன் காமா, ஒரு தேசிய அளவிலான கொண்டாட்டத்திற்காக இவ்வாறு விலங்குகளைக் கொல்வது, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து வகையான பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் யானைகளைக் கொல்லலாம் என்ற தவறான வழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், போட்ஸ்வானாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மனித–யானை மோதல்களைக் கட்டுப்படுத்தவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கட்டுப்படுத்தப்பட்ட வேட்டை அவசியம் என அரசு வாதிடுகிறது.
மறுபுறம், விலங்கு நல அமைப்புகளும் வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களும், ஒரு நாட்டின் தேசிய கொண்டாட்டத்திற்காக யானைகளை வேட்டையாடுவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத வேட்டையாடுதலை ஊக்குவிக்கும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.
கலாச்சாரப் பெருமையும், சுற்றுச்சூழல் முக்கியத்துவமும் கொண்ட யானைகளை ஒரு கொண்டாட்ட விருந்துக்காகக் கொல்வது உலகிற்கு தவறான செய்தியை எடுத்துச் செல்லும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இதனால், போட்ஸ்வானாவின் 60-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 23 யானைகளை வேட்டையாடி, அவற்றின் கறியை பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கிய விவகாரம், வனவிலங்கு பாதுகாப்பு, மனித–யானை மோதல், பாரம்பரிய உணவு கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வேட்டை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சர்வதேச அளவிலான விவாதமாக மாறியுள்ளது.
