https://republictn.com/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட “இல்லம் தேடி கல்வி” திட்டம் நிறுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த தன்னார்வலர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திட்டத்தின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “இல்லம் தேடி கல்வி” திட்டத்தில் பணியாற்றி வந்த தன்னார்வலர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிய அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்தனர்.

மேலும், இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசால் கடந்த ஆட்சிக் காலத்தில், குறிப்பாக கொரோனா காலத்துக்குப் பிறகு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு “இல்லம் தேடி கல்வி” என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஒன்பது ஒன்றியங்களில் சுமார் 1,740 தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

வருகிற ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டம் தொடருமா அல்லது நிறுத்தப்படுகிறதா என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தன்னார்வலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்:

“எங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது திட்டம் தொடருமா என்பதற்கே எந்த தகவலும் இல்லை.

நாங்கள் அனைவரும் படித்தவர்கள்தான். தகுதி வாய்ந்தவர்களாகவே இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளோம். எனவே எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

அதேபோல் இந்த திட்டம் தொடர வேண்டும். மாணவர்களின் கல்வி நலனுக்காக இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இப்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் எங்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே அரசு எங்களுக்கு நிரந்தர பணி வழங்கி, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தன்னார்வலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago