Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகையும், அவரது கட்சியின் மகத்தான வெற்றியும் இரு திராவிட கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் எதிர்க்கட்சிகளான திமுக- அதிமுக ஆகிய இரு துருவங்களையும் ஒருசேர யோசிக்க வைத்துள்ளது.

விஜய் என்ற ‘மகா பிம்பத்தை’ வீழ்த்துவதற்காக திமுக, அதிமுகவுடன் ஒரு மறைமுகப் புரிதலை ஏற்படுத்த விரும்பியதாகவும், அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் 6 தொகுதிகளில் 5 தொகுதிகள் ஏற்கனவே அதிமுக வசம் இருந்தவை. இரட்டை இலை சின்னத்தில் வென்றவை. எனவே, இந்தத் தொகுதிகளில் அதிமுக தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.

ஒருவேளை திமுகவுடன் ஏதேனும் ஒரு மறைமுக உடன்பாடு வைத்தால், “இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றுதான்” என்று கூறி, ஒட்டுமொத்தமாக இரண்டு கட்சிகளையும் விஜய் ஒரே மூட்டையாகக் கட்டி காலி செய்துவிடுவார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் உஷாராக இருக்கிறார். கூட்டணித் தோழமைகளான பாஜக, பாமக போன்ற கட்சிகளுக்குத் தொகுதிகளை விட்டுக்கொடுத்தால் தவெக-வுடன் நெருக்கமாகி வரும் சூழலில் அது சரியாக வராது என்பதால், அதிமுக நேரடியாகவே களம் காண விரும்புகிறது.

இதையும் படியுங்க  "TET விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மௌனம் ஏன்?" – 3 லட்சம் ஆசிரியர்களுக்காக அன்பில் மகேஷ் எழுப்பிய சரமாரி கேள்வி!

எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை தவெக தங்களுக்கு நேரடி எதிரி அல்ல, திமுகதான் பிரதான எதிரி என்ற தத்துவத்தில் பயணிக்கிறார். முன்னாள் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியிலாவது எப்படியாவது வென்று, தங்களின் பலத்தைக் காட்ட திமுக துடிக்கிறது. அதே நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு நகர்வது போன்ற சூழல் நிலவுவதால், சிறுபான்மையின வாக்குகள் தவெக-வுக்கு ஒட்டுமொத்தமாகச் சென்றுவிடுமோ என்ற அச்சம் திமுகவுக்கு எழுந்துள்ளது.

இதனைத் தடுக்க, தற்போதைய விசிக முக்கிய பிரமுகரான ஆளூர் ஷாநவாஸை மையப்படுத்தி, இஸ்லாமிய வாக்குகளைத் தக்கவைக்க திமுக திரைமறைவு வேலைகளை யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் ஆதரவு தவெக பக்கமே பெருமளவில் சாய்ந்திருப்பதால், திமுகவின் இந்த மனப்பால் பலிக்குமா என்பது சந்தேகமே. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் ஒரு சினிமா நடிகர் என்பதால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றார் என்று தப்புக் கணக்கு போடுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல; கடந்த 60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் இருந்து மக்கள் ஒரு பெரிய ‘மாற்றத்தை’ விரும்புகிறார்கள்.

இதையும் படியுங்க  "நான் விஜய் சேதுபதிக்கு ஜோசியம் பார்த்தேன்.. அவருக்கு நேரம் சரியில்ல!" - தவெக MLA கனிமொழி 'Astro' வார்னிங்!

சமூக ஊடகங்களின் மோகம் தாண்டி, மக்கள் தவெக-வை ஒரு புதிய மாற்றுச் சக்தியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தவெக தலைவர் விஜய் அரசியல் மேடைகளில் தற்போதைக்கு அமைதியாக, ஒரு பள்ளிச் சிறுவனைப் போல அடக்கமாகக் கோட் அணிந்து வலம் வருவது மக்களிடையே அவருக்கான ஒரு தனித்துவமான ‘பிராண்ட்’ மதிப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு நேர்மாறாக, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது துண்டுச் சீட்டுகளை பார்த்துப் பேசுவது போன்ற விஷயங்களையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுக- அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மக்கள் இன்னும் தங்களின் பழைய அரசியல் மயக்கத்திலேயே இருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறாகிவிடும். மக்கள் இப்போது மிகவும் உஷாராகிவிட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் ‘நோ’ என்ற ஒற்றை முடிவு திமுகவுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்திருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு வெல்ல இரு கட்சிகளும் திட்டமிடுகின்றன. எது எப்படியாயினும், ‘விஜய்’ என்ற மகா பிம்பத்தின் அரசியல் வருகை இரு திராவிடப் பேரியக்கங்களையும் ஒருசேரப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போதைய கசப்பான உண்மை.

இதையும் படியுங்க  ஆதவ், மரியவில்சன் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கார் எதுக்கு? எதிர்க்கட்சிக்கு கொடுக்கும் லஞ்சமா? விஜய்யை விளாசும் சீமான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago