தர்மபுரி அருகே, கடந்த 2023ஆம் ஆண்டு ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், இன்று தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், கடந்த 2023ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்போது மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் என்பவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வி அசின் பானு, குற்றவாளி பிரகாஷுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தை உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை தூக்கு தண்டனை, பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தர்மபுரி அருகே ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இன்றைய முக்கியச் செய்தியாக அமைந்துள்ளது.
