தவெக எடுத்து வரும் அடுத்தடுத்த நகர்வுகளும், கட்சிக்குள் நிலவும் உள்விவகாரங்களும் உளவுத்துறையினரால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் உளவுத்துறை மைக்ரோ லெவலில் உன்னிப்பாகக் கவனித்து, அதுகுறித்த விரிவான அறிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது அங்கு நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும், கட்சி விவகாரங்களையும் ஒருங்கிணைக்கும் முழுப் பொறுப்புகளையும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவர் மட்டுமே முன்னின்று கவனித்து வருகின்றனர். கட்சித் தலைமையகத்தில் நிகழும் அன்றாட விவகாரங்கள், அரசியல் முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை இவர்கள் இருவரும் தொடர்ந்து விஜய்க்கு உடனுக்குடன் அப்டேட் செய்து வருகின்றனர்.
பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனைகள் மட்டுமின்றி, அங்கு வாரந்தோறும் நடைபெறும் மாற்றுக்கட்சியினரின் இணைப்பு விழாக்களைப் பற்றியும் உளவுத்துறை அக்குவேறாக, ஆணிவேறாகத் தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடைசியாக நடந்த தவெக ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் 10-க்கும் மேற்பட்ட தவெக எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் உளவுத்துறை அறிக்கையின் மூலம் முதல்வருக்குத் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த அதிருப்திக்குத் தூண்டுகோலாகப் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தையும் உளவுத்துறை அந்த அறிக்கையில் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளது. மாற்றுக்கட்சியினரின் வருகையும் பதவி மோதல்களும்ஒவ்வொரு வார இறுதியிலும் அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிப் பெருமளவிலான புதிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு இணையும் புதிய நபர்கள் அனைவரும் தங்களுக்குக் கட்சியில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புடனேயே தங்களை இணைத்துக் கொள்கின்றனர். ஆனால், இன்னும் பலருக்கு எதிர்பார்த்த கட்சிப் பதவிகள் கிடைக்காததால், அவர்கள் கடும் வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
தலைவர் விஜய்யின் அதிரடி உத்தரவுஉளவுத்துறையிடம் இருந்து வந்த இந்த ரகசிய ரிப்போர்ட்டை அடுத்து, தவெக தலைவர், முதல்வர் விஜய் உடனடியாகச் செயலில் இறங்கியுள்ளார். கட்சிக்குள் அதிருப்தி புகைச்சலாக மாறுவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கட்சியில் புதிதாக இணைந்த முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் தகுந்த கட்சிப் பதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று தவெக முக்கியப் பொறுப்பாளர்களுக்கு அவர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
