https://republictn.com/

இந்திய திரையுலகில், ஆரம்ப கால படங்களிலேயே வெறும் கவர்ச்சி நாயகியாக அல்லாமல், தன்னுடைய இயல்பான மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார் நடிகை ருக்மிணி வசந்த்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ருக்மிணி வசந்த், 2019-ஆம் ஆண்டு வெளியான ‘பீர்பல் ட்ரைலஜி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே ‘ஜான்வி’ என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றார்.

இதையடுத்து, ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ திரைப்படத்திலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராசி’ திரைப்படத்திலும் நடித்தார்.

மேலும், ரிஷப் ஷெட்டியுடன் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். தற்போது, யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ‘மெலிசா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படத்திலும் ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இணையத்தில் ருக்மிணி வசந்தின் பெயரில் ஆபாச பிகினி புகைப்படங்கள் வைரலானது. பாரம்பரிய தோற்றத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த அவரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ருக்மிணி வசந்த், அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், அவை தன்னுடையவை அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தனது சட்டக்குழு மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், போலியான புகைப்படங்களை முதலில் பகிர்ந்ததுடன், தொடர்ந்து பரப்பிய 29 முக்கிய சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டன.

மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களிடம் ஐபி முகவரி மற்றும் கணக்கு விவரங்களை பெற்று நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பரப்பியதன் மூலம் நடிகை ருக்மிணி வசந்தின் நற்பெயருக்கும் தனியுரிமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago