பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (MGR Film and Television Institute) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான மனோஜ் பரமஹம்சா, தான் பயின்ற கல்வி நிறுவனத்திற்கே தற்போது தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள அவர், ‘ஈரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும், நடிகர் விஜயுடன் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள மனோஜ் பரமஹம்சா, விஜய் நடித்த ‘நண்பன்’, ‘பீஸ்ட்’ மற்றும் ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, 2026–27 கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக 10 பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு, ஒளிப்பதிவாளர்கள் ஆர். வேல்ராஜ், விஜய் மில்டன், படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், ராமர் மற்றும் கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, இந்தப் பதவியில் ஓவியரும் கலைஞருமான ட்ராட்ஸ்கி மருது பணியாற்றி வந்த நிலையில், அவருக்குப் பதிலாக தற்போது மனோஜ் பரமஹம்சா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
