இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் திருநங்கையாக தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொண்டுள்ளார். தற்போது அவர் அனயா பங்கர் என்ற பெயரில் அறியப்படுகிறார்.
தனது தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அனயா, உள்ளூர் போட்டிகளில் மும்பை 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகவும், புதுச்சேரி 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர் சர்பராஸ் கான் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் பயிற்சியும் பெற்றுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஹார்மோன் மாற்று சிகிச்சையைத் தொடங்கிய அனயா, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கான முழுச் செலவையும் அவரது தந்தை சஞ்சய் பங்கர் ஏற்றுக்கொண்டதுடன், குடும்பத்தினரும் அவரது முடிவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். ஹார்மோன் சிகிச்சையால் தனது உடல் தசை வலிமையில் மாற்றம் ஏற்பட்டாலும், மனதளவில் பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைந்துள்ளதாக அனயா தெரிவித்துள்ளார்.
தற்போது 25 வயதாகும் அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அளவிலான மகளிர் சமூக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் அனுமதி பெற்றுள்ளார். இதன்படி, ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் அளவிலான பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட முடியும். மகளிர் பிக் பேஷ் லீக் போன்ற உயர்மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு கூடுதல் தகுதி விதிகள் உள்ளன. அதன்படி, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகே அவர் உயர்மட்டப் போட்டிகளுக்கான தகுதியைப் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின்படி, ஆஸ்திரேலியா சென்ற பிறகு அனயாவுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு தொடர்ந்து 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி குறித்து பேசியுள்ள அனயா, ஒரு கட்டத்தில் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவோம் என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டதாகவும், தனது அடையாளத்திற்காக கிரிக்கெட்டை விட்டுவிடுவதா அல்லது கிரிக்கெட்டுக்காக தனது அடையாளத்தை மறைப்பதா என்ற குழப்பமான சூழலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு தனக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஹார்மோன் சிகிச்சைக்குப் பிறகு தனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தசை வலிமை மற்றும் ஹார்மோன் அளவுகள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய உடலியல் சோதனை அறிக்கையையும் அனயா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த எட்டு பக்க அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருநங்கை வீராங்கனைகள் தொடர்பான விளையாட்டு விதிமுறைகள் அறிவியல் மற்றும் மருத்துவத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, ஆண் பருவமடைந்த திருநங்கை வீரர்கள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் திருநங்கை வீராங்கனைகள் மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவது தொடர்பாக தனிப்பட்ட முறையான கொள்கை தற்போது இல்லை என்று அனயா தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பை அவர் நாடியுள்ளார்.
தனது பாலின மாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக அறிவித்த பிறகு, பலரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றதாகக் கூறும் அனயா, கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்த சிலரிடமிருந்து பாலியல் தொல்லைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கிரிக்கெட் உலகில் பிரபலமான ஒரு வீரர் சமூக வலைதளம் மூலம் தனக்கு ஆபாசமான புகைப்படத்தை அனுப்பி அதிர்ச்சியளித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கிரிக்கெட் உடை மாற்றும் அறைகள் மற்றும் மைதானங்களில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆதிக்க மனப்பான்மை, திருநங்கைகள் குறித்த கேலிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும் அனயா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கிரிக்கெட்டைத் தாண்டியும் அனயா பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார். கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த காலத்தில் லண்டனில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். மேலும், யுஎக்ஸ் டிசைனராகப் பணியாற்றியுள்ளதுடன், ‘அனயா இன்னோவேஷன்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்தையும் தொடங்கி தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ள அனயாவை இன்ஸ்டாகிராமில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், எம்எக்ஸ் பிளேயரில் வெளியான ‘ரைஸ் அண்ட் ஃபால்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அளவில் மகளிர் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும், அது தனது இறுதி இலக்கு அல்ல என அனயா தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த இந்தியாவுக்காக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவு என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அனயா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
விளையாட்டுத் துறையில் உள்ள விதிமுறைகள், சமூகத்தின் விமர்சனங்கள் மற்றும் பல்வேறு தடைகளைத் தாண்டி, தனது பாலின அடையாளத்தையும் கிரிக்கெட் மீதான காதலையும் ஒன்றாகக் கொண்டு பயணித்து வரும் அனயா பங்கரின் முயற்சி, விளையாட்டுத் துறையில் திருநங்கை வீராங்கனைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் விதிமுறைகள் குறித்து உலகளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
