உத்தரப் பிரதேச மாநிலத்தில், 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்ட தொழிலதிபரும் நில உரிமையாளருமான தந்தையை, சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க மறுத்த ஆத்திரத்தில், அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான மகன், சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட நீண்டநாள் தகராறைத் தொடர்ந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம், மோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான ஹரியோம் சௌதரி. இவர் தனது மனைவி மீனாட்சி, மூத்த மகன் நிகில் மற்றும் இளைய மகன் நிஷு ஆகியோருடன் வசித்து வந்தார்.
ஹரியோம் சௌதரிக்கு பல ஏக்கர் விவசாய நிலங்களும், டெல்லி–மீரட் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மூத்த மகன் நிகில், எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததுடன், மதுப் பழக்கத்திற்கும் அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

மகன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், ஹரியோம் சௌதரி அவருக்காக ஒரு கடையையும் அமைத்துக் கொடுத்திருந்தார். ஆனால், அந்த தொழிலை முறையாக கவனிக்காமல், அதில் கிடைத்த வருமானத்தையும் வீணடித்து, மதுப் பழக்கத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், குடும்பச் சொத்தில் ஒரு பகுதியை தனது பெயருக்கு உடனடியாக எழுதி தர வேண்டும் என்று நிகில் தொடர்ந்து தந்தையிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், மகனின் பொறுப்பற்ற வாழ்க்கை முறையை காரணமாகக் கூறி, ஹரியோம் சௌதரி சொத்தை அவரது பெயருக்கு மாற்ற மறுத்ததாக தெரிகிறது.
இதனால், தந்தை மற்றும் மகன் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், ஹரியோம் சௌதரி தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் வீட்டிற்கு வந்த நிகிலை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிகில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, தனது தந்தையின் முகத்தை குறிவைத்து சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குண்டு பாய்ந்து ஹரியோம் சௌதரி கீழே விழுந்த நிலையிலும், ஆத்திரம் அடங்காத நிகில், அவரது மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை குறிவைத்து மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து நிகில் தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில், ஹரியோம் சௌதரியின் மனைவி மீனாட்சியும், இளைய மகன் நிஷுவும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று ஹரியோம் சௌதரியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய நிகிலை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில், இந்தக் குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை புதிதல்ல என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 2018-ஆம் ஆண்டிலும், இதே சொத்து விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது, தந்தைக்கு ஆதரவாக பேசிய இளைய மகன் நிஷுவை, அவரது அண்ணன் நிகில் துப்பாக்கியால் சுட்டதாகவும், அந்தத் தாக்குதலில் நிஷு சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், குடும்பத்தினரிடையே சொத்து தொடர்பான பிரச்சினை தொடர்ந்து நீடித்ததாகவும், பல ஆண்டுகளாக இருந்து வந்த அந்த தகராறே இறுதியில் தந்தையின் உயிரைப் பறிக்கும் கொடூரச் சம்பவமாக மாறியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, பெற்ற தந்தையையே அவரது மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
