இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. ஜூலை 19 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி, ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியாக இருக்கலாம்.
ரோஹித்தின் பெற்றோர்களான குருநாத் ஷர்மா- பூர்ணிமா ஷர்மா, தங்கள் மகனின் இறுதிப் போட்டியைக் காண லண்டன் வந்தடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் ரோஹித் கடைசியாக இந்திய ஜெர்சியில் விளையாடுவதைக் காணலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் ஆகியோர் கடந்த வாரம் ரோஹித் ஷர்மாவைச் சந்தித்து, இந்திய அணியின் நீண்டகாலத் திட்டம் குறித்து விவாதித்தனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு ரோஹித்தை தாங்கள் பரிசீலிக்கவில்லை என்றும், இதுவே அவரது கடைசி சர்வதேசத் தொடராக இருக்கலாம் என்றும் தேர்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தேர்வுக் குழு இப்போது இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறது. மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்கால தொடக்க ஆட்டக்காரராக ஒரு முக்கியப் பங்காற்றுவதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்.

ரோஹித் ஷர்மாவின் பெற்றோர் லண்டன் வந்துள்ளனர். அவரது கடைசி ஒருநாள் போட்டியைப் பார்க்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இது ரோஹித் ஷர்மாவின் கடைசி போட்டியாக இருக்குமா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிசிசி தரப்பிலிருந்தும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் ரோஹித்தின் கடைசி தொடராக இருந்திருக்க வேண்டியது. ஆனால், அந்தத் தொடரில் அவர் அரைசதம் அடித்ததால், தேர்வாளர்கள் இந்த முடிவை ஒத்திவைக்க முடிவெடுத்தனர். இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய தொடரில் ரோஹித்தின் பேட் சுழலவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 11 ரன்கள் எடுத்த அவர், கார்டிஃபில் நடந்த இரண்டாவது போட்டியில் 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது இறுதியில் அவரை இந்த ஓய்வு என்கிற பெரிய முடிவை எடுக்கத் தள்ளியது.
ரோஹித் சர்மா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கு விடைபெற்றுவிட்டார். பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் இந்தியாவை டி20 உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்திய உடனேயே, அவர் ஜூன் 29, 2024 அன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, மே 2025-ல், இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இப்போது அவர் லார்ட்ஸில் 50 ஓவர் வடிவத்தில் தனது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
