குறைந்த விலையில் தங்க நாணயங்கள் வழங்குவதாகக் கூறி சுமார் ரூ.20 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சந்தை விலையை விடக் குறைந்த விலையில் தங்க நாணயங்கள் மற்றும் அசையாச் சொத்துகள், குறிப்பாக வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றும், முதலீடு செய்தால் அதிக மாதாந்திர வருமானம் கிடைக்கும் என்றும் கூறி பலரிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முதலீட்டுத் திட்டத்தை ஆய்வாளர் ஷீலா மேரி, தன்னுடன் பணியாற்றிய காவல்துறையினரிடமும் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக காவலர்கள், உயர் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே ஷீலா மேரியின் உறவினரும், அவரது கார் ஓட்டுநருமான பிரபு மணி கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய திட்டமிடுபவராக ஷீலா மேரி செயல்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையரின் உத்தரவின் பேரில், ஷீலா மேரி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு அவரை கைது செய்த போலீசார், சென்னை கே.கே. நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தில் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு அசையாச் சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஷீலா மேரி தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய காலத்திலும் இதேபோன்ற முறையில் காவல்துறையினரிடம் முதலீடு பெறப்பட்டதாகவும், அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா, மோசடி செய்யப்பட்ட முழுத் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, வேறு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
