https://republictn.com/

சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நாள்தோறும் (Daily Hearing) விசாரணை நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளானதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது முன்னாள் காவல்துறையினருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் தற்போது முக்கியமான சட்டரீதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் காவலர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தொடர்பான நீதிமன்றத்தின் பரிந்துரையும், தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும், ஜூலை 15-ஆம் தேதி முதல் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு இந்த விசாரணை தொடங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முதலில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைப்பார்.

அதனைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒன்பது முன்னாள் காவலர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது மேல்முறையீட்டு வாதங்களை வரிசையாக முன்வைக்க உள்ளனர்.

இந்த வழக்கில் சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவை சேர்த்து சுமார் 10,000 பக்கங்களுக்கும் மேல் இருப்பதால், விசாரணையை விரைந்து முடிக்கும் நோக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நாள்தோறும் விசாரணை நடத்தும் முறையை கையில் எடுத்துள்ளது.

இதற்கிடையே, சிறையில் தங்களுக்கு ‘முதல் வகுப்பு’ (First Class) அறை வசதி வழங்கக் கோரி ஐந்து முன்னாள் காவலர்கள் தாக்கல் செய்த மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஜூலை 15 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நாள்தோறும் நடைபெறவுள்ள விசாரணை, சட்ட வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago