இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நேற்று நடைபெற்றது சமாஜ்வாதி கட்சியின் கூட்டம் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டமாகும். பாஜகவை எதிர்கொள்வது எப்படி, நாட்டில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், வேலைவாய்ப்பு பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் சர்வதேச சூழ்நிலைகளால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் போன்ற விவகாரங்களில் நாடாளுமன்றத்திற்குள் மற்றும் வெளியே எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சில முக்கிய கூட்டணி கட்சிகள் பங்கேற்காத நிலையிலும், பாஜக எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளையும், பின்னர் வெளியான தகவல்களையும் பார்க்கும்போது, அது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு “ரியாலிட்டி செக்” வழங்கும் கூட்டமாகவே அமைந்தது. காங்கிரஸ் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலே கூட்டத்தின் முக்கியச் செய்தியாக இருந்தது.
கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிபிஎம் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோர் காங்கிரஸின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அகிலேஷ் யாதவின் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. காரணம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணியாக செயல்பட உள்ளன.
அத்தகைய சூழலில், சமீபத்திய மாநில அரசியல் அனுபவங்களை எடுத்துக்காட்டி, காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் நடந்துகொண்ட விதம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் தமிழ்நாட்டில் திமுகவுடன் இணைந்து செயல்பட்ட போதிலும், கூட்டணியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் தலைமைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது, தேர்தல் காலங்களில் குழப்பமான அரசியல் சிக்னல்களை வழங்கியது போன்ற அம்சங்களும் விமர்சனங்களாக முன்வைக்கப்பட்டன.
அகிலேஷ் யாதவின் பேச்சில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய பிராந்திய சக்தியாக இருப்பதால், அங்கு காங்கிரஸ் கூட்டணித் துணை கட்சியாக செயல்பட வேண்டிய சூழல் உள்ளது என்பதை மறைமுகமாக நினைவூட்டியதாக கூறப்படுகிறது.
அதேபோல், தேஜஸ்வி யாதவும் கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் காங்கிரஸ் சில மாநிலங்களில் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக மறைமுகமாக வேட்பாளர்களை நிறுத்திய சம்பவங்களும் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
சிபிஎம் தலைவர் ஜான் பிரிட்டாஸ், கேரளாவில் காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை குறித்தும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேசிய அளவிலான கூட்டணியில் இணைந்து செயல்படும் நிலையில், மாநில அரசியல் விமர்சனங்கள் கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என அவர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் கருத்துகளின் மையப் பொருள் ஒன்றே. அதாவது, காங்கிரஸ் தனது செயல்பாட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இல்லையெனில் இந்தியா கூட்டணியின் பாஜக எதிர்ப்பு அரசியல் பலவீனமடையும் என்பதே அந்த எச்சரிக்கை.
இதற்கு பதிலளித்ததாக கூறப்படும் ராகுல் காந்தி, கூட்டணி கட்சிகளின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதாகவும், மாநிலத் தலைவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில்தான் தாம் பிரச்சாரங்களில் கருத்து தெரிவிப்பதாகவும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அந்த விளக்கம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு முழுமையான திருப்தியை அளித்ததா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் நிலவுகிறது.
மொத்தத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய பிராந்தியக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகள் கூட்டணியின் அரசியல் நோக்கங்களை முழுமையாக வலுப்படுத்துவதில்லை என்ற கருத்தை இந்தக் கூட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
