நீட் (NEET) தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “நீட்டும் நீதியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், “அனைத்து மாநிலங்களின் சார்பாக என்னால் பேச முடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பற்றிய உண்மையை உறுதியாகச் சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நீட் தேர்வு சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானதாக இருப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழகத்தில் பரந்த அரசியல் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை பலமுறை ஒருமனதாக தீர்மானங்களையும், அதற்கான மசோதாக்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
இருப்பினும், தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கைக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும், மாநில மக்களின் உணர்வுகளுக்கும், சட்டப்பேரவையின் ஜனநாயக முடிவுகளுக்கும் உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும் குளறுபடிகள் வெறும் நிர்வாகக் குறைபாடுகள் மட்டுமல்ல என்றும், ஒரே ஒரு தேசிய அளவிலான தேர்வு மூலம் நாட்டின் அனைத்து மாணவர்களின் தகுதியையும் தீர்மானிக்க முடியும் என்று கருதும் அதன் அடிப்படைக் கட்டமைப்பிலேயே மிகப்பெரிய குறைபாடு இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அளவிலான ஒரே தேர்வு முறை நடைமுறையில் இருப்பதால், முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேரும் பெண் மருத்துவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று கல்வி கற்கத் தயங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், இது பெண்களின் உயர்கல்வியையும், அவர்களின் மருத்துவக் கனவுகளையும் பெருமளவில் பாதிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் தனது சொந்த நிதியை முதலீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நீட் தேர்வு முறை மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அந்த முதலீட்டின் பலன்கள் அந்தந்த மாநில மாணவர்களுக்குச் சென்றடையாமல் தடுக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்குத் தேவை ஒற்றை மையப்படுத்தப்பட்ட கல்வி முறை அல்ல என்றும், மாநிலங்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை வைக்கும் கல்விக் கொள்கையே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக, ஒற்றைத் தேர்வு முறையை நாடு முழுவதும் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
“தகுதி” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தற்போது வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளால் ஒரு சந்தையாக மாறிவிட்டது என்றும், இன்று மாணவர்களின் தகுதியை விட பணமே முக்கிய காரணியாக மாறியிருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், நீட் தேர்வை நியாயப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒற்றைத் தேர்வே ஒரே தீர்வு என்ற பிடிவாதத்தை விட்டுவிட்டு, மாநில அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் திறந்த மனதோடு கலந்தாலோசித்து, மாணவர்களின் நலனை முன்னிறுத்தும் மாற்று வழிகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, “நியாயப்படுத்த முடியாத ஒன்றை தொடர்ந்து நியாயப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள். மாணவர்களின் நலன், சமூக நீதி மற்றும் மாநிலங்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யுங்கள்” என்று தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் மீண்டும் நீட் தொடர்பான விவாதத்தை அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் தீவிரப்படுத்தியுள்ளன.
