https://republictn.com/

சிவகங்கையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சடலமாகக் கொண்டு செல்லப்பட்ட நவீன் என்ற இளைஞர் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடைப் பகுதியில் நவீன் என்ற இளைஞர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதிய காவல்துறையினர், அவரது உடலை சடலமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றபோது, நவீன் மூச்சுவிடுவதும் உயிருடன் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.

நவீன் உயிருடன் இருக்கும்போதே அவரது முகத்தை துணியால் மூடிக்கட்டி, சடலம் போலக் கொண்டு சென்றதாகக் கூறி மருத்துவர்களின் அலட்சியத்தை அவரது உறவினர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர்.

மேலும், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நவீனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட நவீனுக்கு தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், நவீனை வெட்டிக் காயப்படுத்திய மர்ம நபர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன, மேலும் அவர் உயிருடன் இருந்த நிலையிலும் சடலமாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாகக் கருதப்பட்ட இளைஞர் உயிருடன் இருந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago