https://republictn.com/

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்து போதிய குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக போதிய அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில், பூலாம்பட்டி காவேரி ஆற்றில் உள்ள கதவின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த வாரம் குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டதாகவும், தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தாவாந்தெரு பகுதியில் காங்கிரீட் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலையின் கீழ் செல்லும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி நகராட்சி ஆணையாளர் கோபிநாத், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்து, போதிய குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

போதிய குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago