தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பரான ஜெயபாலும் அதே கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
