Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள குப்பைக் கிடங்கால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையான சுகாதாரப் பாதிப்புகளையும், நரக வேதனையையும் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் இந்த திறந்தவெளி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், 24 மணி நேரமும் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆயக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால், இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாகத் தரம் பிரிக்கப்படுவதில்லை என்றும், குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் மற்றும் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குப்பைகள் அவ்வப்போது தீப்பற்றி எரிவதால் ஏற்படும் புகை மற்றும் காற்றில் கலக்கும் மாசுகளால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் குப்பைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுநீர் (Leachate) நிலத்துக்குள் இறங்குவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, நிறம் மாறியுள்ளதாகவும், அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீருக்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி, இயற்கை வளங்களும் ஆன்மிகச் சிறப்பும் கொண்ட முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே அமைந்துள்ள ஆயக்குடி, மா மற்றும் கொய்யா விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதியாக உள்ளது.

இதையும் படியுங்க  "தினக்கூலி பெண்கள் வரை சம்பளத்துடன் லீவ்? தமிழகத்தில் வரலாறு படைக்குமா மாதவிடாய் விடுப்பு சட்டம்!"

ஆயக்குடி சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் மா, கொய்யா உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஆயக்குடி பேரூராட்சியின் 16-வது வார்டு பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகிலேயே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கால் அப்பகுதி மக்கள் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். குப்பைகளால் வீசும் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் நோய்த் தொற்று அச்சம் ஆகியவை தங்களது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குப்பைக் கிடங்கை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவான மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பேரூராட்சி அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை மனு அளித்தும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  "மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்கா, இல்லையா?" – பள்ளிக்கல்வித் துறையைக் கதறவிட்ட மதுரை ஐகோர்ட்!

பொதுமக்களுடன் இணைந்து இதுவரை 19 முறை மனுக்கள் அளித்தும், ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகம், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகளை மாற்றுவதற்கான மாற்று இடத்தைக் கூட இதுவரை அதிகாரிகள் தேர்வு செய்யவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Republic Tamil

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது, “நீங்களே இடத்தை காட்டுங்கள்” என்று அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் காற்றின் திசை மாறும்போது துர்நாற்றம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவி, நோய்த் தொற்று ஏற்படும் அச்சம் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஆயக்குடி பேரூராட்சி குப்பைக் கிடங்கின் நிலை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, ஐ.ஏ.எஸ்., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குப்பைகள் சேகரிக்கப்படும் முறை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் இருப்பதைப் பார்த்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துரைத்தனர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாகவும், மாற்று இடம் கிடைத்தால் குப்பைக் கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது, மாற்று இடம் இல்லாததால் தற்போது குப்பைக் கிடங்கை மாற்ற முடியவில்லை என்றும், மாற்று இடம் கிடைத்தவுடன் குப்பைக் கிடங்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவுத் திட்டம் ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை!

ஆயக்குடி மட்டுமின்றி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைக் கிடங்குகளுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். திண்டுக்கல்–பழனி சாலையில் உள்ள முருகபவனம் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் 16.5 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் குப்பைகளைக் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகங்களும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஆயக்குடி குப்பைக் கிடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள குப்பைக் கிடங்கை மாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் தொடரும் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது கிடைக்கும் என்பதே ஆயக்குடி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago