Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுற்றியிருந்த கட்டிடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், பச்சை நிறத்திலான 4 மாடி வீடு மட்டும் அசையாமல் நின்றது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீட்டின் உரிமையாளர்களான பிரகாஷ் பாண்டே மற்றும் லக்ஷ்மி பாண்டே, தங்களது வீடு வெள்ளத்தில் இருந்து தப்பியதற்கான காரணங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர்.

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் திரிசூலி ஆற்றங்கரையில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளத்தில் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் உருக்குலைந்தன. ஆனால், பச்சை நிற வீடு மட்டும் கம்பீரமாக அசையாமல் நின்றது. இதற்குப் பின்னால் பல சுவாரஸ்யமான மற்றும் திகிலூட்டும் தகவல்கள் இருப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீர் வடிந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்களில், வீட்டின் அடிப்பகுதியில் இருந்த மண்ணும் தரைப்பகுதியும் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும், ஆழமாக அமைக்கப்பட்டிருந்த தூண்கள், வலுவான ஆர்.சி.சி. கட்டமைப்பு மற்றும் எக்ஸ் வடிவிலான அடித்தள அமைப்பு காரணமாகவே வீடு நிலைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடு நேற்றோ, இன்றோ கட்டப்பட்டதல்ல. சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடம், அக்காலத்திலேயே எவ்வித சமரசமும் இல்லாமல் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டபோது வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் பாண்டே, அவரது மனைவி லக்ஷ்மி மற்றும் குடும்பத்தினர் என மொத்தம் 6 பேர் வீட்டிற்குள் இருந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகரித்தபோது, “இதுதான் நம் வாழ்வின் இறுதி நிமிடம்; நாம் பிழைக்க மாட்டோம்” என்ற அச்சத்திலேயே இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "மருத்துவ உலகையே உலுக்கிய பவன் கல்யாண் ரசிகையின் வெறித்தனம்! வைரலாகும் ஆபரேஷன் தியேட்டர் வீடியோ!"

திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கான எச்சரிக்கை கிடைத்ததும் பிரகாஷ் வீட்டிற்குள் ஓடுவதற்குள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வெள்ள நீர் தொடர்ந்து உயர்ந்ததால் நான்காவது மாடி மற்றும் மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

இந்தத் திகிலூட்டும் நேரத்தில், அவர்களது 7 வயது மகன் பள்ளிக்குச் சென்றிருந்ததால், அவனுக்கு என்ன ஆனதோ என்ற கவலையே தங்களை அதிகம் வாட்டியதாக பிரகாஷ் மற்றும் லக்ஷ்மி பாண்டே உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீர் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் குடும்பத்தினர் மொட்டை மாடியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். பின்னர், அங்கிருந்து சைகை காட்டியதைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் அவர்களைக் கவனித்து, குடும்பத்தினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தின் ஆக்ரோஷத்தைக் கண்டு அச்சமடைந்த குடும்பத்தினர், தங்களைக் காப்பாற்ற வேண்டி மொட்டை மாடிக்குச் சென்று தொடர்ந்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து, சிவபெருமானை தீவிரமாக வழிபட்டதாக லக்ஷ்மி பாண்டே தெரிவித்துள்ளார். தங்களது பக்தியும் நம்பிக்கையுமே அந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு மனவலிமையை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆற்றில் பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்ததால், சத்தம் எழுப்பி உதவி கோர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, சிவப்பு நிறத் துணியை கொடி போல அசைத்து மீட்புக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க குடும்பத்தினர் முயன்றுள்ளனர். அந்தச் சிவப்புத் துணியே அவர்கள் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினருக்கு அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  “இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு மூவ்.. ரஷ்யாவுடன் நடந்த ரகசிய ஆலோசனை!”

வெள்ளம் வீட்டைத் தாக்கியபோது, அது சாதாரண வெள்ள நீராக இருக்கவில்லை என்றும், பெரும் சேறும் சகதியும், ராட்சதப் பாறைகளும் கலந்த நிலையில் மிகுந்த வேகத்துடன் வீட்டின் மீது மோதியதாகவும் லக்ஷ்மி பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளத்தின் தாக்கத்தால், 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது உணர்ந்ததைவிட மிகவும் பயங்கரமான அதிர்வுகளையும் குலுக்கல்களையும் வீடு சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். தங்களது கண் முன்னே அடுத்தடுத்து பக்கத்து வீடுகள் இடிந்து விழுந்ததைக் கண்டபோது, தங்களது வீடும் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்த வீட்டின் கட்டுமானம் குறித்து பலரும் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர். “என்ன சிமெண்ட் பயன்படுத்தி இந்த வீட்டைக் கட்டினார்கள்?” எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடு தற்போது இணையத்தில் ‘மிராக்கிள் ஹவுஸ்’ (Miracle House) என அழைக்கப்பட்டு வருகிறது.

உலகமே தங்களது வீட்டின் கட்டுமானத்தைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டாடி வந்தாலும், பாண்டே குடும்பத்தினர் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர். தங்களது வீடு தப்பியிருந்தாலும், சுற்றியிருந்த கடைகள், உடமைகள், வாகனங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக பிரகாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடினால் சிறைதான்! கடும் எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!

“எங்கள் வீடு வைரலாகி இருக்கலாம். ஆனால், சுற்றியிருந்த கடைகள், உடமைகள், வாகனங்கள் என எங்களது வாழ்வாதாரம் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. வீடு தப்பியிருந்தாலும், எங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையும் தடம் புரண்டுவிட்டது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர் மிக வேகமாக மூன்றாவது மாடி வரை உயர்ந்தபோது, இனி தப்பிக்க வழியே இல்லை என குடும்பத்தினர் நினைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், “பிரிந்து சாவதைவிட, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாகவே இறப்போம்” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு மரணத்திற்காகக் காத்திருந்ததாக லக்ஷ்மியின் உறவினர் ஒருவர் பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சுற்றியிருந்த கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த 4 மாடி வீடு மட்டும் நிலைத்திருப்பது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒருபுறம் இந்த வீட்டின் கட்டுமான வலிமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமும் பாராட்டும் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் பெருவெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பாண்டே குடும்பத்தின் வேதனையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரண்டு மணி நேரம் மொட்டை மாடியில் காத்திருந்து மீட்கப்பட்ட இந்தக் குடும்பத்தின் அனுபவம், நேபாள பெருவெள்ளத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தும் மற்றொரு சாட்சியாக மாறியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago