கோவையில் ரூ.7 கட்டணத்திற்குப் பதிலாக ரூ.10 வசூலித்ததாகக் கூறப்படும் தனியார் பேருந்தை நடுரோட்டில் மறித்து, பெண் பயணி ஒருவர் நடத்துநரிடம் தைரியமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கோவை அண்ணாசாலை அருகே, உக்கடத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் வழித்தடத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. உக்கடத்தில் இருந்து அண்ணாசிலை பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் பயணக் கட்டணம் அரசு மற்றும் பெரும்பாலான நகரப் பேருந்துகளில் ரூ.7 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் நடத்துநர் ரூ.10 கட்டணம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “ரூ.7 தான் கட்டணம் என்ற நிலையில், எதற்காக ரூ.10 வாங்குகிறீர்கள்?” என்று நடத்துநரிடம் நியாயமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அதற்கு நடத்துநர் உரிய விளக்கம் அளிக்காமல், அலட்சியமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கு” என்றும், “வேண்டுமென்றால் புகார் கொடுத்துக்கொள்ளுங்கள்” என்றும் கூறியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

நடத்துநரின் இந்தப் பதிலால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர், பேருந்தை நடுரோட்டிலேயே மறித்து நிறுத்தி, கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து நடத்துநரிடம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு பெண் தனி ஒருவராக நடுரோட்டில் நின்று தனியார் பேருந்தை மறித்து, முறையான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில தனியார் மற்றும் மினி பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களைக் கூறி ரூ.1, ரூ.2 என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பும் பயணிகளிடம் சில நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்துகொள்வதாகவும் இணையவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோவை மாநகரில் சில தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற புகார்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து, விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகம் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண் பேசும்போது, “ரூ.7 தான் கட்டணம். தினமும் அதே கட்டணத்தில்தான் பயணம் செய்து வருகிறேன். ஆனால், இந்தப் பேருந்தில் ரூ.10 கேட்கிறார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ‘நான் இப்படித்தான் வாங்குவேன். இஷ்டம் இருந்தால் வா, இல்லையென்றால் வராதே’ என்று கூறுகிறார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “ரூ.7 கொடுத்துத்தான் இத்தனை நாட்களாகப் பயணம் செய்து வருகிறேன். ஆனால், கூடுதலாகப் பணம் கேட்பதுடன், கேள்வி கேட்டால் அலட்சியமாகப் பேசுகிறார்கள். அதனால்தான் பேருந்தை மறித்து நியாயம் கேட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பயணியிடம் சிறிய தொகை கூடுதலாக வசூலிப்பது தனிப்பட்ட முறையில் குறைவாகத் தோன்றினாலும், அதேபோல் ஏராளமான பயணிகளிடம் தினசரி வசூலிக்கப்பட்டால் அது பெரிய அளவிலான முறைகேடாக மாறக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, தனியார் மற்றும் மினி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிமீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
