தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெயரில், வட மாநிலங்களில் நூதன முறையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலைத் தேடி, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழக சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுதொடர்பாக சுமார் 6 புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் முதலமைச்சர் விஜய்க்கு அதிகரித்து வரும் பிரபலத்தைப் பயன்படுத்தி, ஒரு மோசடி கும்பல் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் “விஜய் அறக்கட்டளை” ஊழியர்கள் என பொதுமக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு அறக்கட்டளை மூலம் கல்விக் கடன், சிறு தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய தொழில் கடன் மற்றும் ஸ்டார்ட்அப் நிதியுதவி என ரூ.10 லட்சம் வரை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர்.
இதற்காக கட்டாயப் பதிவுக் கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம் (Verification Fee), ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் மூலம் பணம் வசூலித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போலியான ஆன்லைன் பதிவு லிங்குகளை அனுப்பியுள்ளனர். அந்த லிங்குகளைத் திறந்து பதிவு செய்த பின்னர், சரிபார்ப்புக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் (Processing Fee), ஆவணக் கட்டணம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி தொடர்ந்து பணத்தைப் பறித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தாங்களே தொடங்கித் தருவதாகவும், வெளிநாட்டுப் படிப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அந்தக் கும்பல் ஆசை வார்த்தைகளைக் கூறியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட போலி லிங்குகள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் ஆதாரங்களை இந்தூர் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக முதற்கட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தூர் குற்றப்பிரிவு கூடுதல் துணைக் காவல் ஆணையர் (ADCP) ராஜேஷ் தண்டோதியா வெளியிட்ட தகவல்களின்படி, இந்த மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியுள்ளது.
முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிதியுதவி மற்றும் மானியம் குறித்து ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்களுக்கு போலியான ஆன்லைன் பதிவு லிங்குகளை அனுப்பியுள்ளனர். அந்த லிங்குகள் மூலம் விவரங்களைப் பதிவு செய்தவர்களிடம், அடுத்தடுத்து பல்வேறு கட்டணங்களைக் கூறி பணம் வசூலித்துள்ளனர்.
இந்த மோசடி மூலம் அந்தக் கும்பல் சுமார் ரூ.10 லட்சம் வரை பணத்தைச் சுருட்டியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளிகளின் டிஜிட்டல் தடயங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களை அடிப்படையாகக் கொண்டு இந்தூர் குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடி நெட்வொர்க் பெரிய அளவில் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தூர் காவல்துறை தற்போது தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. இந்த வழக்கில் கிடைத்த டிஜிட்டல் தடயங்கள் மற்றும் புகார் விவரங்கள் தமிழக சைபர் கிரைம் போலீஸாருடன் பகிரப்பட்டுள்ளன.
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, தமிழக மற்றும் மத்தியப் பிரதேச போலீஸார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த மோசடி கும்பலின் பின்னணியில் வட மாநிலங்களையும் தமிழகத்தையும் இணைக்கும் பெரிய அளவிலான சைபர் நெட்வொர்க் செயல்படுகிறதா என்ற கோணத்திலும் இரு மாநில போலீஸாரும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த மோசடிப் பணம் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ‘முல் அக்கவுண்டுகள்’ (Mule Accounts) எனப்படும் வாடகை வங்கிக் கணக்குகள் மூலம் கைமாறியுள்ளதாகவும், இந்தூர் போலீஸார் சேகரித்த டிஜிட்டல் தடயங்களில் இருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், இந்த மோசடி நெட்வொர்க்கை முழுமையாகக் கண்டறிந்து முறியடிக்கும் வகையில், தமிழக சைபர் கிரைம் மற்றும் மத்தியப் பிரதேச போலீஸார் இணைந்து வட மாநிலங்களில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யின் பெயரையோ அல்லது அவரது கட்சியின் பெயரையோ குறிப்பிட்டு, முன்பணம் அல்லது பதிவுக் கட்டணம் கேட்டு வரும் போலி தொலைபேசி அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி பொதுமக்கள் பணம் அனுப்ப வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
முதலமைச்சர் அல்லது அவரது அறக்கட்டளை பெயரில் யாராவது நிதியுதவி வழங்குவதாகக் கூறினால், அவர்களிடம் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிரக்கூடாது என்றும், பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என்றும் இந்தூர் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு வழங்கும் எந்தவொரு நிதியுதவியும், கடனும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும். தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ, முன்பணம் செலுத்துவதன் மூலமாகவோ அரசு நிதியுதவிகள் கிடைக்காது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு சமீபகாலமாக மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக புதிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோசடி கும்பல், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்” என்பது போன்ற எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் கருத்துகளைத் திட்டமிட்டு பரப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆன்லைன் பிரபலத்தை நம்பி, இந்தூர் பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள் எளிதில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வழக்கமான ஏழை, எளிய மக்களை மட்டுமின்றி, சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோரையும் இந்தக் கும்பல் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. “முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது” எனக் கூறி, தொழில் யோசனைகளுடன் இருந்த இளைஞர்களிடம் பதிவுக் கட்டணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்களை முழுமையாக நம்ப வைப்பதற்காக, முதலமைச்சர் விஜய்யின் பெயர் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய போலியான அறக்கட்டளை ஆவணங்கள், லெட்டர்ஹெட்கள் மற்றும் அரசு முத்திரைகள் போன்ற டிஜிட்டல் ஆவணங்களையும் இந்த மோசடி கும்பல் உருவாக்கியுள்ளது.
மேலும், தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் தங்களை “விஜய் பவுண்டேஷனின் டெல்லி அல்லது மும்பை கிளை அதிகாரிகள்” என அறிமுகப்படுத்திக் கொண்டு, ஹிந்தி மொழியில் பேசி பொதுமக்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தூர் குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்துள்ள டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், மோசடியாகப் பெறப்பட்ட பணம் பல்வேறு மாநிலங்களில் உள்ள ‘முல் அக்கவுண்டுகள்’ மூலம் கைமாறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மோசடி கும்பலின் முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்து, அதன் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்ய தமிழக சைபர் கிரைம் மற்றும் மத்தியப் பிரதேச போலீஸார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சைபர் மோசடியில் யாரேனும் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக தேசிய சைபர் கிரைம் புகார் தளம் மூலமாகப் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
