தவெக அரசு பதவியேற்ற பிறகு, கடந்த கால திமுக ஆட்சியின் முறைகேடுகள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஜூன் 24-ஆம் தேதி முன்னாள் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலுவின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி வேட்டை நடத்தியது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக, கரூரில் இயங்கி வந்த எ.வ.வேலுவின் மெகா கரன்சி குடோன், அவரது பினாமி நெட்வொர்க் குறித்த அதிரவைக்கும் ரகசியங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
ரோடு போடாமல் கோடிகள் சுருட்டல்
கடந்த 2022 மார்ச் மாதத்தில், தமிழக நெடுஞ்சாலைத் துறையில் களத்தில் எந்த ஒரு சாலையையும் அமைக்காமல், வெறும் பேப்பரில் மட்டுமே ரோடு போட்டதாகக் காட்டி, குறிப்பிட்ட சில காண்ட்ராக்டர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை ஆதாரத்துடன் ‘அறப்போர் இயக்கம்’ வெளிக்கொண்டு வந்து புகார் அளித்தும், அப்போதைய ஆளுங்கட்சி பலத்தால் அந்தப் ஃபைல் முடக்கப்பட்டத. ஆனால், தற்போது தவெக அரசின் புதிய லஞ்ச ஒழிப்புத் துறை அந்தப் பழைய ஊழல் ஃபைலைத் தூசி தட்டி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கரூரில் இயங்கிய ‘சாம்ரி இன்ப்ரா’ கரன்சி குடோன்
இந்த ரகசிய விசாரணையில், கரூரின் மையப்பகுதியில் எ.வ.வேலுவின் நிழலாகவும், பினாமியாகவும் வலம் வரும் கரூர் சுரேஷ் என்பவரது ‘சாம்ரி இன்ப்ரா டெவலப்பர்ஸ்’ கம்பெனி லஞ்ச ஒழிப்புத் துறையின் ராடாரில் சிக்கியுள்ளது.
2021-ல் ஜிஎஸ்டி பதிவோடு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சுரேஷுடன் பவித்ரா, நல்லுசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் பார்ட்னர்களாக உள்ளனர். கரூர் சிட்டிக்குள் சுமார் 2000 சதுரடி பரப்பளவில், 3 தளங்களுடன் ஒரு பிரம்மாண்ட ஆபீஸாக இது கட்டப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
அமைச்சர் ஏ.வ.வேலுவின் ஸ்பெஷல் சிபாரிசு இருந்தால் மட்டுமே இந்த பில்டிங்கிற்குள் நுழைய முடியும். காலையில் 10:30 முதல் 12:45 வரையும், மதியம் 3:30 முதல் மாலை 6:00 மணி வரையும் மட்டுமே இந்த ஆபீஸின் கேட் திறந்திருக்கும். இந்த ஆபீஸிற்குள் 10-க்கும் மேற்பட்ட கேஷ் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, வெறும் பணப் பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்துள்ளன. அங்கு அட்டைப்பெட்டிகளில் கரன்சிகள் பண்டல் பண்டலாக அடுக்கப்பட்டிருந்ததால், பில்டிங் முழுவதுமே கரன்சி வாசனை அடிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மற்றொரு கிளை சென்னை ஆழ்வார்பேட்டையிலும் ரகசியமாக இயங்கி வந்துள்ளது.

எ.வ.வேலுவின் பினாமி கரூர் சுரேஷ்
‘துண்டு சீட்டு’ டெண்டர் முறை.. 40% கமிஷன்
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில் யாருக்கு டெண்டர் போக வேண்டும் என்பதை அதிகாரிகளுக்குப் பதிலாக இந்த கரூர் சுரேஷ்தான் முடிவு செய்துள்ளார்.
பெரிய காண்ட்ராக்டர்கள் அதிகாரிகளைப் பார்க்காமல், கரூருக்குச் சென்று சுரேஷிடம் பர்சன்டேஜ் கமிஷனை செட்டில் செய்ததும், அவர் ஒரு குட்டி ‘துண்டு சீட்டில்’ திட்டத்தின் பெயர், காண்ட்ராக்டர் பெயரை எழுதிக் கொடுப்பாராம். அந்தத் துண்டு சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே, மாவட்ட உயர் அதிகாரிகள் காண்ட்ராக்டருக்குப் போன் செய்து டெண்டர் கன்ஃபார்ம் ஆனதை அறிவிப்பார்கள். கடந்த ஆட்சியில் சுமார் 40% மெகா டெண்டர்கள் இந்த ஒரே கம்பெனி மூலமாகவே ஆன்லைனில் சப்மிட் செய்யப்பட்டு, முறைகேடாகக் கைமாறியுள்ளதை லஞ்ச ஒழிப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ-க்களையே வட்டிக்கு வதக்கிய பினாமி
இந்தக் கரன்சி குடோன் வெறும் காண்ட்ராக்ட் கமிஷன் வாங்கும் இடமாக மட்டுமில்லாமல், தேர்தல் சமயங்களில் வேட்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் மையமாகவும் செயல்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் 100-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது ஒரிஜினல் சொத்து பத்திரங்களை இந்த சுரேஷ் கம்பெனியில் அடகு வைத்து, பெட்டி பெட்டியாகக் கோடிகளைக் கடனாக வாங்கியுள்ளனர்.
அரசு வாகனங்களில் கரன்சி சப்ளை
திமுக தலைமை வழங்கிய தேர்தல் ஃபண்டுகளைக் கூட, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அரசு வாகனங்கள், ‘தேர்தல் பணி’ ஸ்டிக்கர் ஒட்டிய வண்டிகள் மூலமாக சுரேஷ்தான் வேட்பாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளார்.
2021 எலக்சனுக்காக இங்கு கடன் வாங்கிய சில திமுக எம்.எல்.ஏ-க்கள், அசலை விட பல மடங்கு வட்டி கட்டியும் இன்னமும் தங்களது சொத்து பத்திரங்களைத் திருப்பித் தராமல் சுரேஷ் வதப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்டர் கிரவுண்டில் மொட்டைக் கடுதாசி புகார்களைத் தட்டிவிட்டுள்ளனர்.
இவ்வளவு பெரிய கரன்சி நெட்வொர்க் இயங்கியும் கடந்த காலங்களில் ஐடி, இடி அல்லது மாநில விஜிலென்ஸ் துறைகள் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம், அவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்ட பெருந்தொகையும், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கான ஸ்பெஷல் மெகா கிஃப்டுகளும்தான்.
தற்போது ஏ.வ.வேலுவை டார்கெட் செய்து தவெக அரசு ரைடு ஆரம்பித்தவுடன் உஷாரான சுரேஷ் டீம், குடோனில் இருந்த பல நூறு கோடி ரூபாய் கரன்சிகளை அவசர அவசரமாக சில பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான ரகசிய இடங்களுக்கு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறை ஊழல், துண்டு சீட்டு டெண்டர் முறை, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே கந்துவட்டி கொடுத்த விவகாரம் எனத் தமிழ்நாட்டின் மிகப்பெரிய டாப் சீக்ரெட் ஊழல் நெட்வொர்க்கை தவெக அரசு தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு லாக் செய்துள்ளது . இந்த அத்தனை விபரங்களும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், கூடிய சீக்கிரமே முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, திமுகவின் உச்சக்கட்ட தலைமை வரை தவெக அரசின் அடுத்த அதிரடி ஆக்ஷன் பாயப்போவது உறுதி என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
