மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோனாவாலா லோஹகாட் கோட்டையில், ஜூன் 18, 2026 அன்று நடைபெற்ற 26 வயது இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலின் மரணம் விபத்து அல்ல; அது அவரது வருங்கால மனைவியும், அவரது காதலனும் இணைந்து நடத்திய திட்டமிட்ட கொலை என போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில், செல்ஃபி எடுக்கும் போது கால் தவறி 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கேத்தன் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
புனேவின் கஹுஞ்சே பகுதியைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகனான கேத்தன் அகர்வாலுக்கும், சியா கோயல் என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக ராஜஸ்தானில் ரூ.17 கோடி செலவில் அரண்மனை மற்றும் இரண்டு தனியார் விமானங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 18 அன்று சியா கோயலின் பிறந்தநாளை முன்னிட்டு, உயரமான இடங்கள் மீது பயம் கொண்டிருந்த கேத்தனை, சியா கட்டாயப்படுத்தி லோஹகாட் கோட்டைக்கு ட்ரெக்கிங்கிற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பலத்த காற்று வீசிய நிலையில், புகைப்படம் எடுக்கும் போது கேத்தன் தவறி விழுந்து உயிரிழந்ததாக சியா கோயல் போலீசாரிடம் தெரிவித்ததுடன், சமூக வலைதளங்களிலும் அவருடன் இருந்த வீடியோக்களை பகிர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
ஆனால், லோனாவாலா ஊரக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. சியா கோயலுக்கு சேத்தன் சௌத்ரி என்ற நபருடன் ரகசிய காதல் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. கேத்தனுடன் திருமணம் நடைபெறுவதில் விருப்பமில்லாத சியா, தனது காதலனுடன் சேர்ந்து கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி, சேத்தன் சௌத்ரியை லோஹகாட் கோட்டைக்கு வரவழைத்த சியா, இருவரும் இணைந்து கேத்தனை பின்னால் இருந்து தள்ளி 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் வீழ்த்தி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இதற்கு முன்பாக ஜூன் 14-ஆம் தேதியன்றும் அதே கோட்டையில் கேத்தனை தள்ளிவிட்டு கொல்ல சியா முயன்றதாகவும், அப்போது புதர்களைப் பற்றிக் கொண்டு கேத்தன் உயிர் தப்பியதாகவும் விசாரணையில் இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கேத்தனின் குடும்பத்தினர் அளித்த புகார், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தனது மகனைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேத்தன் அகர்வாலின் தாய் கண்ணீர் மல்க நீதிக்காக கோரிக்கை விடுத்துள்ளார்
