புதுச்சேரியைச் சேர்ந்த கலைமாமணி விருது பெற்ற ஓவியக் கலைஞர் குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீரில் அவரது திருவுருவப் படத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஓவியர் குமார், புதுச்சேரி அரசின் உயரிய “கலைமாமணி” விருதைப் பெற்றவர். தனது தனித்துவமான கலைத்திறனுக்காக அறியப்படும் அவர், இந்த முறை தண்ணீரின் மேற்பரப்பில் வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தி விஜயின் முக உருவத்தை தத்ரூபமாக வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், அவரது ஓவியக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான கலைப் படைப்பை காண பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலர் நேரில் வந்து பார்வையிட்டு பாராட்டி வருகின்றனர்.
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்க்கு தனது கலை வழியாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஓவியர் குமாரின் இந்த முயற்சி சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
தண்ணீரில் ஓவியம் வரையும் தனது அசாத்திய திறமையின் மூலம் மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ள கலைமாமணி குமாருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
