அதிமுக சார்பில் ஆகஸ்ட் 13 அன்று காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற முதன்மை ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்றார்.
எதிர்பார்த்ததை விடக் குறைந்த கூட்டம்
இந்த ஆர்ப்பாட்டங்களை அரசு தரப்பும் உளவுத்துறையும் மிகத் தீவிரமாகக் கண்காணித்தன. எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கலந்துகொண்ட தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம் உட்பட, மாநிலத்தின் பல மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வருகை இல்லை என்பதுதான் தமிழக அரசுக்கும் உளவுத்துறைக்கும் கிடைத்த ரகசியத் தகவலாகக் கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் ஏற்கனவே தவெக உள்ளிட்ட மாற்று முகாம்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், தற்போதைய களச்சூழல் கட்சிக்குச் சவாலாக மாறியுள்ளது. எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்களும் உட்கட்சி விவகாரங்களில் அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்படுகிறது.
மேலும், அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச் செயலாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தல் களத்தில் செய்யப்பட்ட செலவுகளுக்கான வட்டிச் சுமையே இன்னும் தீராத நிலையில், இத்தகைய தொடர் போராட்டங்களை நடத்துவதற்கான நிதி ஆதாரங்களைத் தலைமை ஏற்று நடத்தாதது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய மற்றும் புதிய நிர்வாகிகளிடையே நிலவும் இந்த பொருளாதார நெருக்குதல்களும், தலைமையின் மீதான மனக்குறைகளுமே ஆர்ப்பாட்டங்களில் கூட்டம் குறையக் காரணம் என்ற விவரம் அதிமுக தலைமைக்கும் சென்றடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”ஏற்கனவே தேர்தலுக்காக செய்த செலவுக்கெல்லாம் வட்டி கட்டவே முடியல. இதுல இந்த செலவு வேறையா? அந்த கடன் பிரச்சனைக்கே தலைமை தரப்புல ஏறெடுத்து கூட பார்க்கல. இதை செஞ்சா மட்டும் என்னத்த ஹெல்ப் பண்ணிட போறாங்க?” என பழைய நபர்களும் இப்போது இருக்கிற புதிய நபர்களுக்கும் பொருளாதார நெருக்கடி இருப்பதால் இதன் அதிருப்தி ரிசல்ட்தான் அவர்களால் இந்த கூட்டத்தை கூட்ட முடியவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் பறந்திருகிறது என்கிறார்கள்.
