https://republictn.com/

தாமரை இலை மேல் நீர் போல தவெக ஆதரவு நிலைப்பாட்டில் பட்டும் படாமல் இருந்து வரும் இடதுசாரிகளுக்கு பாஜக மீதான முதல்வர் விஜயின் அணுகுமுறை சந்தேகத்தை கிளப்பி இருப்பதாக வெளியாக இருக்கும் தகவல்கள் பனையூரை அதிர வைத்துள்ளது. திமுக கூட்டணியில் ரத்தமும், சதையுமாக இருந்து வந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகான காலத்தின் கோலதால் தவெக அணிக்கு தாவும் சூழல் ஏற்பட்டது.

முன்னே சென்ற காங்கிரசும், பின்னே வந்த முஸ்லிம் லீக்கும் உடன் வந்த விசிகவும், அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு கூட்டணி அரசில் அங்கம் ஆகிவிட்டபோதிலும் கம்யூனிஸ்டுகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தன. இந்த நிலையில் தான் தவெக விஜய் தமது தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாமல்லபுரத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தவெக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாமல்லபுரம் கூட்டத்தின் மூலம் தவெக கூட்டணியை இறுதி செய்து, அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களில் இணைந்து களமாடலாம் என தவெக தலைமை கணக்கு போட்டது. அதற்கு பெரும்பாலான கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால், கம்யூனிஸ்டுகள் மட்டும் பிடி கொடுக்காமல் தங்கள் நிலைபாட்டில் பிடிவாதமாகவே உள்ளனர்.

அதன் எதிரொலியாகவே தவெகக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டணி கட்சி கூட்டத்தை இரு கட்சிகளும் புறக்கணித்தன. இதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் ஒன்று மறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மையக்குழு கூட்டத்தின் மூலம் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும், இன்னமும் இரு கட்சிகளிலும் நிர்வாகிகள் மட்டத்தில் அது தொடர்பான கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது என்றும் ஒன்றிய அரசு எனக் கூட சொல்ல முடியாமல் மீண்டும் இந்திய அரசு என்ற சொல்லாடலுக்கு தவெகமா றிவிட்டதாகவும் சுட்டிக்காட்டி தலைமையிடம் செஞ்சட்டை தோழர்கள் கூறுவதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இப்போதே நாம் கூட்டணியை உறுதி செய்துவிட்டால் பின்னால் தவெக அரசு பாஜக திட்டங்களை ஆமோதித்தாலோ, அமல்படுத்தினாலோ நாம்தான் பழியை சுமக்க வேண்டும் என முக்கிய தலைவர்கள் எச்சரித்ததாகவே தெரிகிறது. அது மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கணக்கில் கொண்டே பொறுமையாக இருக்க கம்யூனிஸ்டுகள் முடிவு செய்துள்ளன. மேலும் தவக அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்த்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே தான் தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சு வார்த்தைக்குள் செல்லாமல் தோழமை என்ற வட்டத்தோடு தள்ளி நிற்க வேண்டும் என இரு கட்சிகளும் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. அதுவரை மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, வாய்ப்பு ஏற்பட்டால் திமுகவுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர் கூட்டத்தை மொத்தமாக புறக்கணித்து விட்டால் அது திமுகவினருக்கு தீனி போட்டதை போல் ஆகிவிடும் என்பதால் முதலமைச்சர் விஜயை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசியதோடு தங்கள் சார்பிலான கோரிக்கைகளையும் முன்வைத்து விட்டு வந்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago