https://republictn.com/

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றினார்.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்து, “இந்த ஆளுநர் உரை திராவிட இயக்க அரசியலுக்கும், திமுக அரசுக்கும் கிடைத்த வெற்றி” என்று கருத்து தெரிவித்தார்.

புதிய அரசின் கொள்கை வழிகாட்டியாக அமைந்துள்ள இந்த ஆளுநர் உரையில், முந்தைய திராவிட மாடல் அரசு வகுத்த எல்லைகளைத் தாண்டி புதிய அரசு செல்ல முடியவில்லை என்றும், திமுக அரசு உருவாக்கிய கொள்கை வடிவங்களையே தொடர்ந்து பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், இது திராவிட இயக்க அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் காலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, மாநில அரசே தனியாக நடத்தாமல், ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து நடத்த வலியுறுத்துவோம் என்ற நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒன்றிய அரசின் பக்கம் அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுகவின் உதயநிதி ஸ்டாலின், “முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தவெக அரசு மீண்டும் அறிவித்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் அரசு தயாரித்த உரைகளில் பல்வேறு திருத்தங்களைச் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் முழுமையாக வாசித்திருப்பதாகவும், இதன் மூலம் தவெக மற்றும் பாஜக இடையே இணக்கமான சூழல் நிலவுவது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

அத்துடன், இந்த ஆளுநர் உரை முந்தைய திமுக அரசுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

புதிய தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை, முந்தைய ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் ஒத்திருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதனை தங்களுக்குக் கிடைத்த தார்மீக வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago